குவியப்போகும் தங்கம்: உலக சந்தையை உலுக்கும் மிகப்பெரும் கண்டுபிடிப்பு!
தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அதன் தேவை உலகம் முழுவதும் அதிகரித்துவருகிறது. இதன் பொருட்டு நாடுகள் தங்கத்தை முதலீடாக குவிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்க, செம்பு மற்றும் வெள்ளி வளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் கனிமப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டன் கணக்கான கனிமங்கள்
அர்ஜென்டினாவின் சான் ஜுவான் மாகாணம் மற்றும் சிலியின் அட்டகாமா பிராந்தியம் இடையே அமைந்துள்ள இந்த இடம், "விகுனா கனிமப் படுகை" என அழைக்கப்படுகிறது.
அங்கு Lundin Mining மற்றும் BHP எனும் சுரங்க நிறுவனங்கள் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுவரை, முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, 13 மில்லியன் டன் செம்பு, 32 மில்லியன் அவுன்ஸ் தங்கம், 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இங்கே உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்றான Filo del Sol பகுதியில் மட்டும் 600 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு தாது உள்ளதாகவும் Josemaria பகுதியில் 200 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் மிகப்பெரிய மாற்றம்
இந்த கண்டுபிடிப்பு, அர்ஜென்டினாவின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் க்ரீன் எனர்ஜி தொழில்நுட்பங்கள் மேம்படுவதில் செம்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், அர்ஜென்டினா ஒரு முக்கிய விநியோகஸ்தராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.
இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதே நேரத்தில், இந்த வளர்ச்சியால் சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் பழங்குடியின மக்களுக்கான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.
எனினும், இந்த புதிய வளங்கள், உலக சந்தையில் தங்கம் மற்றும் செம்புக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
