ரூபா 24 கோடியை செலுத்தாமல் வெளிநாடு பறந்த விரிவுரையாளர்கள்
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நூற்றி இருபத்தி இரண்டு விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகத்திற்கு (டிசம்பர் 31, 2022க்குள்) 24 கோடி ரூபாவை செலுத்தத் தவறியுள்ளனர்.
கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மீறியதன் காரணமாக அவர்களிடமிருந்து இந்தத் தொகை அறவிடப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பரிந்துரை
எதிர்காலத்தில் கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில், பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப் குழு) பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தது.
இந்நிலைமை இது வரை சரி செய்யப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விசாரா ஊழியர்களுக்கு 837 இலட்சம் ரூபாய்
இதற்கிடையில், இடைக்கால ஆய்வு அறிக்கையோ அல்லது இறுதி ஆய்வு அறிக்கையோ எடுக்காமல் பல்கலைக்கழகத்தின் ஐம்பத்தொன்பது கல்விசாரா ஊழியர்களுக்கு 837 இலட்சம் ரூபாய் ஆராய்ச்சி கொடுப்பனவுகளாக வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1, 2014 முதல் ஓகஸ்ட் 31, 2022 வரை ஆராய்ச்சி மேலாண்மைக் குழுவின் அனுமதியின்றி இந்தக் குழுவுக்கு இந்த ஆராய்ச்சிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
