வெள்ளவத்தையில் நடக்கும் கொள்ளைகள்: பின்னணியில் காவல்துறையினரா... மனோ சந்தேகம்
இலங்கையில் இந்த வருடம் 111 துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கிறது. 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 59பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் அதனைக் கண்டு பிடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (13) நிலையியற் கட்டளை 27/2 கீழ் பாதுகாப்பு அமைச்சு சார் வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களுக்கு காணி உரிமை
”மலையக மக்களை ஒதுக்குவதை நிறுத்துவதாக அதிபர் பல தடவைகள் தெரிவித்திருக்கிறார். அது நல்ல விடயம் அதனை செய்யுங்கள். அதேநேரம் காணி உரிமையை வழங்குங்கள். மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணி உரிமையை வழங்குவதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி யாரும் எதிர்க்கப்போவதில்லை. தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறனர்.
எமது மக்களுக்கு பிரஜா உரிமை இருக்கின்றபோதும் அது பூரணமாக இல்லை. அதனை பூரணப்படுத்தி தோட்ட மக்களை தேசிய நீராேட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதிபர் சொன்னதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700ரூபாயாக அதிகரிக்க கம்பனி இணக்கம் இல்லை என தெரிவித்திருக்கிறது. ஆனால் அதிபர் தெரிவித்தது போல் சம்பள நிர்ணய சபை, கூட்டு ஒப்பந்தம் அல்லது வேறு எந்த வழியிலாவது அதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கிறோம்.
மேலும் கொழும்பில் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரிகள் வீடு வீடாகச்சென்று தகவல் திரட்டி வருகின்றனர். எனது வீட்டுக்கும் வந்தார்கள். அவர்கள் சிவில் அதிகாரிகள். மூன்று மொழிகளிலும் ஆவணங்களை வழங்கி தகவல் திரட்டுகிறார்கள். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆனால் காவல்துறையினர் அந்த வேலையை செய்ய வேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.காவல்துறையினருக்கு இது தேவையற்ற வேலை. இந்த வருடம் நாட்டில் 111 துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது. 50 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 59பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் அதனைக் கண்டு பிடிக்க வேண்டும்.
டிரான் அலஸ் நான் பொய் கூறுவதாக தெரிவித்தார்
அத்துடன் இன்று வெள்ளவத்தையில் பெண்களின் தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதற்கு தேவையான தகவல்கள் காவல்துறையினருக்கு வழங்கப்படுகின்ற தகவல்கள் ஊடாகத்தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் காவல்துறையினருக்கு காவல்துறையினரின் வேலையை செய்யவிடுங்கள் கிராம சேவகர்களுக்கு அவர்களின் வேலையை செய்ய விடுங்கள்.
கொழும்பில் தமிழ் மக்களின் வீடுகளில் காவல்துறையினர் பதிவு செய்வது தொடர்பில் தெரிவித்தபோது அமைச்சர் டிரான் அலஸ், நான் பொய் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்தது அனைத்தும் பொய் என்றே நான் சொல்வது.
அதனால் சிறிலங்கா காவல்துறையினர் கொழும்பில் வீடு வீடாகச்சென்று வழங்கப்படும் சிங்கள மொழியில் மாத்திரமான விண்ணப்ப படிவத்தை நான் சபைக்கு சமர்ப்பிக்கிறேன் அரசியல் அமைப்பின் பிரகாரம் 3 மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் டிரான் அலஸ் மற்றும் தேசபந்து தென்னகோனின் காவல்துறை தமிழில் மாத்திரமே கொழும்பில் விண்ணப்பம் வழங்கி வருகிறது. இதனை நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |