பாதாள குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள்: அநுரவுக்கு முஜூபுர் சவால்!
பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு வரும் அரசியல்வாதிகளின் பெயர்ப் பட்டியலை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுடன் அரசியல்வாதிகள் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி நேற்று (17) தெரிவித்திருந்த நிலையில் அந்த அரசியல்வாதிகளின் பெயர்களை துல்லியமாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் முஜூபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கும் இழைக்கும் அநீதி
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்? பாதாள உலகக் குழுக்களிடம் பணத்தைப் பெற்ற அரசியல்வாதிகள் யார்? பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்ற அரசியல்வாதிகள் யார்? என்பதையும் பெயர் மற்றும் முகவரிகளுடன் ஜனாதிபதி தனித்தனியாக வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு வெளிப்படுத்தாமல் வெறுமனே அரசியல்வாதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக அறிவிப்பது சரியான விடயமல்ல.
பெயர், முகவரி ஏதுமின்றி அரசியல்வாதிகள் மீது பொதுவான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இழைக்கும் அநீதியாகும்.
இதன்காரணமாக, பாதாள உலகக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு வரும் அரசியல்வாதிகளை தனித்தனியாக நாட்டுக்கு வெளிப்படுத்த ஜனாதிபதி உடனடியாக நடடிவக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
