இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கு! முதல் நாள் விசாரணை ஆரம்பம்
இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா தொடுத்துள்ள இனப் படுகொலை வழக்கின் முதல்நாள் விசாரணைகளை சர்வதேச நீதிமன்றம் இன்று ஆரம்பித்துள்ளது.
காஸாவில் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் செயற்பாடுகள் மற்றும் புறக்கணிப்புகள், இனப் படுகொலை தன்மை கொண்டவை என தென்னாபிரிக்கா வாதிட்டுள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கைகள், பலஸ்தீன தேசிய, இன மற்றும் இனக் குழுவின் கணிசமான பகுதியை அழிப்பதை நோக்ககமாக கொண்டவை என தென்னாபிரிக்கா கூறியுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இனப் படுகொலை
இஸ்ரேலின் செயல்களில் "காசாவில் பலஸ்தீனியர்களைக் கொல்வது, அவர்களுக்கு உடல் மற்றும் உளரீதியாக கடுமையான தீங்கு விளைவிப்பது மற்றும் உடல் அழிவை ஏற்படுத்தும் வாழ்க்கை நிலைமைகளை அவர்கள் மீது சுமத்துவது உள்ளிட்டவற்றை ஆதாரங்களாக தென்னாபிரிக்கா முன்வைத்துள்ளது.
காசாவில் உள்ள அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்துவது உட்பட "தற்காலிக நடவடிக்கைகள்" நீதிமன்றத்தால் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் தென்னாபிரிக்கா தனது வழக்கில் வலியுறுத்தியுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் கொடூரமானவை மற்றும் அபத்தமானவை என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாம் எதிர்கொள்வோம் எனவும் மனிதாபிமான சட்டத்தின் கீழ் தற்காப்பை பயன்படுத்துவதற்கான விடயங்களை முன்வைப்போம் என அவர் கூறியுள்ளார்.
எதிர்பார்க்கப்படாத விளைவுகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிரிழப்புக்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தரையில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் அதீத முயற்சியை மேற்கொண்டுவருவதாகவும் இஸ்ரேல் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் உயிரிழந்த துன்பியல் சம்பவம்
இந்த நிலையில் தென்னாபிரிக்கா தொடுத்துள்ள வழக்கில் எதிராக அறிக்கைகளை வெளியிடுமாறு வெளிநாடுகளின் இராஜதந்தரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அந்தந்த நாடுகளில் உள்ள தமது நாட்டு தூதரகங்களுக்கு இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவின் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்குமாறு உலக நாடுகளின் தலைவர்களுக்கு கடிதங்களை அனுப்புமாறு பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவிடம் இஸ்ரேல் தூதுவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை இஸ்ரேலின் தாக்குதல்களில் மீண்டும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்த துன்பியல் சம்பவம் பதிவாகியுள்ளது. ரஃபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 04 சிறார்கள் உட்பட 12 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக ஹமாஸினால் இயக்கப்படும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |