தேர்தலை பிற்போடுவது சர்வதேச நாடுகளைப் பகைக்கும் - உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
உள்ளூராட்சி தேர்தலை ஒத்திப்போட்டால் அதன் விளைவு நாட்டிற்கு பாரியளவில் இருக்கும், சர்வதேச அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும், கடந்த காலங்களில் தேர்தலை ஒத்திப்போட்டதால் ஏற்பட்ட பாரிய விளைவுகளை நாம் சந்தித்தோம்.
சிலவேளை, அரசினால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்பதால் நாங்கள் அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தேர்தலை பிற்போடுவது - சர்வதேசத்தை பகைக்கும்
ஏற்கனவே ஒரு வருடத்திற்கு உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாயின், அது சர்வதேச நாடுகள் அரசுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலையை ஏற்படும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளின் உதவியின்றி இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப் பமுடியாது, தேர்தலை பிற்போட்டு சர்வதேச நாடுகளை பகைப்பதன் விளைவை இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வழக்குத்தாக்கல் செய்துள்ளதுடன், உயர் நீதிமன்றம் என்ன முடிவினை எடுக்கவுள்ளது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

