மொட்டுக்கட்சியை வீழ்த்தும் நகர்வில் தென்னிலங்கை - தாயகத்தில் காலூன்ற திரைமறைவுத் திட்டம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஊடக சந்திப்பு இன்று காலை களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் கேட்டபோது.
நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்,
1. தேர்தலை பிற்போட முயற்சிக்கும் ரணில் அரசு!
நாட்டினுடைய உள்ளூராட்சி சபை தேர்தல் மிகவும் சர்ச்சைக்கும், குழப்பத்துக்கும் மத்தியில் காலையில் தேர்தல் நடக்கும் என்று ஒரு அறிவித்தல் வரும், பின்னர் மாலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வரும், அடுத்த நாள் காலையில் நீதிமன்றங்களை நாடுவதாக வரும், அடுத்த நாள் மாலை தேர்தல் ஆணைக்குழு தேர்தல் நடத்துவதுக்கு நிதி இல்லை என்று நீதிமன்றத்திற்கு சொல்வது போன்ற பல குழப்பமான நிலைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.
எங்களுடைய சில வேட்பாளர்கள் தேர்தலைப் பற்றி ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள் மத்தியில் சில வேளைகளில் சலிப்பு தன்மைகள் வரலாம்.
நாங்கள் இந்த தேர்தலை நடத்தக் கூறி நிச்சயமாக அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தை மதித்து ரனில் விக்கிரமசிங்க அவர்கள் செயல்படுவதாக இருந்தால் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்.
அண்மையிலே கண்டியில் ஜனரஜ பெரஹவில் அரசாங்கத்தின் சின்னத்தினை ஒரு யானை மீது வைத்து ஊர்வலம் சென்று பல இலங்கை மக்களுடைய கோடிக்கணக்கான பணங்களை அதற்கு செலவழித்து இருக்கின்றார்.
அதற்கு முன்னர், சுதந்திர தின நிகழ்விற்கு 200 பில்லியனுக்கு அதிகமான பணத்தினை செலவழித்திருக்கின்றார்.
தற்பொழுதும் கூட ராஜாங்க அமைச்சர்கள், அரசாங்க வாகனங்கள், அரசாங்கத்தினுடைய சலுகைகளை பெறுவதற்கு கோடிக்கணக்கில் மக்களது வரிப்பணத்தை பயன்படுத்துகிறார்கள்.
இவ்வாறான நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தேர்தலுக்கான நிதியினை வழங்கியிருக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கான நிதியினை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் நிதி இல்லை அதனால் நாங்கள் ஜனாதிபதி தேர்தலை இப்போது நடத்த மாட்டோம், நான் தொடர்ச்சியாக ஜனாதிபதியாக இருக்கின்றேன் என்று ரணில் விக்ரமசிங்க கூறலாம்.
இல்லையெனில் நாடு வங்குரோத்தில் இருக்கின்ற பொழுது தேர்தல் நடத்த முடியாது அதனால் நாடு சுபிட்சமான பாதைக்கு வந்த பிற்பாடு தேர்தல்களை நடத்துவோம் என ஜனாதிபதி கூறி, நாட்டை தொடர்ந்தும் வங்குரோத்து நிலையில் வைத்திருக்கலாம்.
தான் நாட்டினுடைய தலைவராக இருக்க வேண்டும் என்பதற்காக நாட்டில் பணம் இல்லை, பணம் வரும்வரை தேர்தலை நடத்த மாட்டோம் என நாட்டினை வங்குரோத்து நிலையில் வைத்திருக்கலாம்.
இன்று மின்சாரத்தினுடைய விலை அதிகரித்திருக்கின்றது, கிட்டத்தட்ட ஐந்து மடங்கு செலவு அதிகரித்து இருக்கின்றது.
நீர் வழங்கள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் நேற்று ஒரு அறிக்கை வழங்கி இருக்கின்றார். நீருக்கான கட்டண பணத்தினை அதிகரிக்க வேண்டும் என கூறி இருக்கின்றார்.
இன்று நாட்டினுடைய எரிபொருள் 150 இல் இருந்து 400 வரை அதிகரித்து இருக்கின்றது.
மக்கள் வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
முகநூலில் ஒரு பதிவு ஒன்றை பார்த்திருந்தேன், 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்று அப்போது எரிபொருள் பால்மா போன்றவைகளை வாங்கி வாழ்க்கையை நடத்தினோம்.
தற்பொழுது அதே ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் மாத்திரம் கிடைக்கின்றது ஆனால் இந்த வருமானத்தை வைத்து தற்போது இருக்கின்ற விலைவாசிகளுக்கு வாழ்ந்தால் நாங்கள் ஒரு அதிசய பிறவி என பதிவிட்டிருந்தார்கள்.
ஒவ்வொரு மாதமும் அன்றாட செலவுகளை ஈடு செய்வதற்கு தொடர்ச்சியாக கடனாளிகளாக மக்கள் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த கடன் தொகை அதிகரித்து போகின்ற பட்சத்தில் வளவுகளை விற்பார்கள், வீடுகளை விற்பார்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? இன்று விசேடமாக நாங்கள் கொழும்பு மாநகர சபைக்குள் இருக்கும் மக்களைப் போல் எங்களுடைய மட்டக்களப்பு மாநகர சபையிலே வசிக்கும் மக்களும் சிரமத்தின் மத்தியில் வாழுகின்றார்கள்.
கிராமப்புறங்களில் இருக்கின்றவர்களுக்கு வீட்டுத்தோட்டம் இருக்கும், தென்னை மரங்கள் இருக்கும் அல்லது வாவிகள் இருக்கும் அல்லது கடல் தொழிக்கு செல்வார்கள் இவ்வாறாக அவர்களுக்கு கஷ்டங்கள் இருந்தாலும் வாழ்க்கையை முன்னெடுக்கின்றார்கள்.
ஆனால் நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்கு கேஸ் வேண்டும், மின்சாரத்தை நம்பியே உண்மையில் இருக்க வேண்டும், அவர்களுடைய வீட்டிலேயே வீட்டுத்தோட்டம் செய்வதற்கான சூழல் இல்லை, பலர் அன்றாட கூலி தொழிலுக்கு செல்பவர்கள், இவ்வாறான கஷ்டப்பட்ட மக்கள் நாடு முழுவதும் இருக்கின்றார்கள்.
2. இம்முறை தெற்கில் செல்வாக்குள்ளது இரண்டு கட்சிகள் - வடக்கில் ஒரு கட்சி
இந்தநிலையில், வடக்குக் கிழக்கிலே பிரதானமானது எங்களுடைய கட்சி தான், ஆனால் தெற்கில் இருக்கும் பிரதேசங்களிலே பிரதானமாக இன்று மக்களுடைய ஆதரவையும் செல்வாக்கையும் பெற்ற இரண்டு கட்சிகள் இருக்கின்றதை நாங்கள் மறுக்க முடியாது.
விமல் வீரவங்ச போன்றவருடைய கட்சி எல்லாம் கூட்டங்கள் நடத்துவதாக நாங்கள் காணவில்லை.
அவர்கள் கூட்டம் நடத்தும் போதெல்லாம் அடிவாங்கி திரும்பி வருகின்ற வரலாறுகள் தான் கடந்த காலங்களிலே இடம் பெற்றது.
மக்கள் தேர்தல் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும், தேர்தல் நடக்காது என அலட்சியமாக இருக்க முடியாது, தேர்தலை நாங்கள் நடத்த வேண்டும் ஏனென்றால் இந்த தேர்தல் ஒன்று நடந்தால் தான் நாங்கள் எங்களுடைய எதிர்காலங்களிலே எங்களுடைய வேலை திட்டங்களை எடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
விஷேடமாக வடக்கு கிழக்கிலே வாழும் மக்கள் எங்களுடைய அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதாக இருந்தால், தமிழ் அரசுக் கட்சிக்கு வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும், இது தான் சர்வதேசம் எல்லாம் தெரிந்த ஒரு கட்சி, 75 வருடங்களாக உள்நாட்டுக்குள்ளே தெரிந்த கட்சி.
தமிழ் மக்களினுடைய அங்கீகாரம் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளினுடைய விடயங்கள் காணமலாக்கப்பட்டுள்ள விடையங்கள்.
இந்தத் தேர்தலில் மக்கள் எங்களுடைய கட்சிக்கு முழுமையான ஆதரவை தர வேண்டும்.
தேர்தல் நடக்கும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு, ஒரு வாரம், இருவாரம் தேர்தல் பின் போடப்பட்டாலும் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும்.
தேர்தல் நடக்காவிட்டால் நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மை இல்லாமல் போய்விடும், பல போராட்டங்கள் வெடிக்கும், போராட்டக்காரர்கள் மீண்டும் களத்துக்கு வருவார்கள்.
கடந்த முறையை போல் அல்லாமல் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸ்ஸாநாயக்க அவர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாங்களும் இணைந்து இந்த அரசுக்கு எதிரான போராட்டங்களை கைகோர்த்து செய்ய வேண்டும் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள்.
3. ஜனநாய ரீதியில் மக்கள் தங்களது எதிர்ப்பை காட்டுவதற்கு தேர்தல் அவசியம்!
அந்தவகையில், ஜனநாயக வழியில் மக்களுக்கு தங்களது எதிர்ப்பை காட்டுவதற்கு ஜனநாய ரீதியில் கிடைக்கின்ற சந்தர்ப்பம் தான் தேர்தல்.
இந்த தேர்தலை பிற்போடாமல் ரணில் விக்ரமசிங்கவினுடைய ஆட்சியில் இருக்கின்ற அமைச்சர்கள் முயற்சி எடுத்து நிச்சயமாக இந்த தேர்தலை நடத்த வேண்டும்.
பிரதானமாக தெற்கிலே தலைமைத்துவமாக இருக்கும் சஜித் பிரேமதாச மற்றும் அனுகுமார திசநாயக்க ஆகியோர் ஒன்றாக இணைந்து அவர்களது கட்சியிலே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஒன்றாக இணைந்து தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த தேர்தல் நடத்த வேண்டும் என்பது, இவர்கள் இருவர்களுடைய கையிலே ஆட்சி செல்வதை நாங்கள் அழகு பார்ப்பதற்கு அல்ல, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் மக்களுடைய ஆணையை இழந்த ஒரு அரசாங்கம் என்று சொல்வதற்காகவே நாங்கள் தேர்தலை நடத்த வேண்டும் என கூறுகின்றோம்.
அந்த அடிப்படையில் வடக்குக் கிழக்கிலே இருக்கும் வேட்பாளர்களுக்கு, குறிப்பாக பல பொய்கைகள் சமூக வலைத்தளங்களில் இடப்படுகின்றது.
நேற்றைய தினம் கூட முஸ்லிம் காங்கிரசின் உடைய தலைவர் ரவூப் ஹக்கீம் ஏதோ ஒரு உடன்படிக்கையை செய்து அதில் அந்த பிரதேச சபைக்கு தீர்மானம் எடுத்ததாக போலியான செய்திகளை முகநூலிலே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினுடைய சில ஆதரவாளர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.
நேற்றைய முன் தினம், முல்லைத்தீவு மாவட்டத்திலே அந்த பிரதேச சபைக்கான ஒரு திட்ட வரைபு மாத்திரமே பேசப்பட்டது.
கிழக்கு மாகாணம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை அவ்வாறு கிழக்கு மாகாணத்தை பற்றி பேசுவதாக இருந்தால் நிச்சயமாக நானும் அந்த இடத்தில் இருந்திருப்பேன்.
4. வீழ்ந்துள்ள மொட்டுக்கட்சி!
நாங்கள் இன்று விசேடமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால், தெற்கிலே இருக்கும் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலே தான் தெற்கிலே பாரிய போட்டித் தன்மை காணப்படுகின்றது.
மொட்டுக் கட்சியினுடைய ராஜபக்சர்கள் தற்பொழுது கூட்டங்களை நடத்தும் பொழுது, நாங்கள் எங்களது வேட்பாளர்களுடன் சில நேரங்களில் வீட்டில் நடத்தும் கூட்டங்களை விட சிறியதாகத்தான் அவர்கள் நடத்தும் கூட்டம் காணப்படுகின்றது.
அவர்களுடைய கட்சியினுடைய நிலைப்பாட்டினை பார்க்கின்ற போது தெற்கிலே அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பது போல்தான் தெரிகின்றது.
வடக்கு கிழக்கிலே மொட்டின் முகவராக செயல்படும் கப்பல், படகு, வீணை போன்ற இந்த சின்னங்களுக்கு மக்கள் மத்தியிலே பாரிய எதிர்ப்பு இருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.
அவர்கள் காலி மாவட்டத்தில் சுயேட்சை குழுவின் ஊடாக சில பிரதேச சபைகளில் ஃபுட்பால் சின்னம், அன்னாசி சின்னத்தில் போட்டியிடுவதாகவும், மொட்டு சின்னம் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளதாகவும் இன்று நான் கேள்விப்பட்டேன்.
இவ்வாறான் நிலையில், இன்று நாட்டிலே தெற்கின் உடைய தலைமைத்துவம் என்று சொன்னல், என்னுடைய பார்வையிலே அனுரகுமார திசாநாயக்க உடைய கட்சி மற்றும் சஜித் பிரேமதாசவினுடைய கட்சி ஆகியவைதான்.
பொதுவாக ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அனுரகுமார திசநாயக்கவினுடைய கட்சியை விமர்சிப்பதும், அனுரகுமார திசாநாயக்க கட்சியில் இருப்பவர்களும், வேட்பாளர்களும் சஜித் பிரேமதாசாவின் கட்சியை விமர்சிப்பதையும் நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.
விமர்சிப்பதை நிறுத்தி ஒன்றாக இணைந்து மொட்டு கட்சியினுடைய வாக்கு மற்றும் செல்வாக்கை இவர்கள் குறைக்க வேண்டும்.
5. இன்று நாடாளுமன்ற எதிர்ப்பு!
தேர்தலை நடத்த கோரி இன்று நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் இது தொடர்பான கருத்து,
பொதுவாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியையும் பல போராட்டங்கள் இடம்பெறும், அவர்கள் அவர்களுடைய எதிர்ப்பினை நாடாளுமன்றத்தின் உள்ளே காட்டி இருக்கின்றார்கள், அது குறித்து பெரிதாக சொல்வதற்கு இல்லை.
6. வடகிழக்கு மோடியின் கையில்
வடகிழக்கு மோடியின் கையில் உள்ளதாக பா ஜா கா வின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கின்றார், அது தொடர்பான உங்கள் கட்சியின் நிலைப்பாடு,
நான் பொதுவாக சொல்லும் விடயம், கட்சியினுடைய நிலைப்பாட்டை சொல்வதற்கு நான் கட்சியினுடைய பேச்சாளர் அல்ல, என்னுடைய நிலைப்பாட்டை கூறலாம்.
வடக்கு கிழக்கு என்பது தமிழ் மக்கள் பூர்வீமாக வாழ்ந்த பிரதேசம், எங்களுக்கு இந்த பிரதேசத்தில் சம உரித்து இருக்க வேண்டும்.
எங்களுக்கு உரித்திருக்கின்றது, நாங்கள் மக்கள் என்பதனால் இதுதான் எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு, அதற்கு இந்தியாவினுடைய ஆதரவு தொடர்ச்சியாக இருக்கின்றது, இந்தியாவினுடைய கரிசனை இருந்திருக்கின்றது.
எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக எங்களுடைய மக்களுக்காக இந்தியாவினுடைய குரல் இருக்கும்.
அவர்களின் கைகளில் இருக்கின்றோம் என சொன்னதை நான் உண்மையில் பார்க்கவில்லை.
கைகளில் இருக்கின்றார்கள் என்று சொன்னால் இந்தியாவினுடைய கரிசனை தமிழர்கள் மீதும் வடக்கு கிழக்கு மக்கள் மீதும் இருக்கும் என்பதனை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம் என நம்புகின்றேன்.
