தங்க மழை பெய்யும் நெற்கதிர்கள் எல்லாம் தங்கமாக மிளிரும் என்ற பிள்ளையான் எங்கே - அம்பலமான விடையங்கள்!
இந்தியாவிற்கு விடுதலைப்புலிகளின் இருப்பு தேவையாக இருக்கின்றது. பழ நெடுமாறன் கூறியது போல இந்தியாவில் இது போல பல அரசியல் தலைவர்கள் இங்குள்ள மக்களை உசுப்பேற்றுவதும், குழப்பமடைய வைப்பதும் ஒரு வழக்கமான செயற்பாடாகவே செய்கின்றனர் என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லை என உறுதிபடுத்திய பின்புதான் இலங்கையின் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பை வைத்தே இன்று அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழரை உசுப்பேற்றும் தமிழ் நாட்டு தலைவர்கள்
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பழ நெடுமாறன் பகிரங்கப்படுத்திய விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் அதி உச்ச பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்திருக்கும். தற்போது கெடுபிடிகள் தளர்த்தப்பட்டிருப்பதால், அவர் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.
அதே நேரத்தில் எதுவும் எப்போதும் நடக்கலாம் அது ஆச்சரியப்பட வேண்டிய விடையமல்ல. விடுதலைப்புலிகளின் தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விடயத்தை தலைவர் ஒருவரே அறிவார் எனவும் சூட்சுமமாக ஏதோவொரு விடையத்தை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
தம் சார்ந்த வருமானத்திற்காக அபிவிருத்தி
அதேவேளை, பிள்ளையான் என்கின்ற அடையாளம் மொட்டினுடைய அடையாளம். அதாவது ராஜபக்ச குடும்பத்தின் அடையாளமே பிள்ளையானின் அடையாளம். இது சிறு குழந்தைக்கும் தெரியும்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற இராஜாங்க அமைச்சர்களான, பிள்ளையானாக இருக்கட்டும் வியாழேந்திரனாக இருக்கட்டும், இவர்கள் செய்த அபிவிருத்தி வேலைகளை பார்த்தால் அவர்களுடைய வருமானம் சார்ந்த அபிவிருத்தி தான் நடைபெற்றுள்ளது.
ஆனால் கடந்த காலத்தில் சிறையில் இருக்கும் போது அவர் வெளியில் வந்தால் ஏதோ தங்க மழை பெய்யும், வயலில் விளைகின்ற நெற்கதிர்கள் எல்லாம் தங்கம் தங்கமாக கதிர் விடும் என்ற கதையெல்லாம், அவருடைய விசுவாசிகள் அளந்துவிட்டு வந்தனர்.
வீதி அபிவிருத்தியில் தரகுப் பணம்
ஆனால் இப்பொழுது அவர்கள் செய்யும் அபிவிருத்தி பொதுமக்கள் சார்ந்த அபிவிருத்தி கிடையாது. இந்த வீதி செய்தால் எவ்வளவு தரகுபணம் கிடைக்கும் அதை செய்தால் எவ்வளவு தரகு பணம் கிடைக்கும் என்ற அவதானத்தில் இருந்தனரே தவிர பொதுமக்கள் நலன் சார்ந்து எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.
கடந்த முறை தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு வாக்களியுங்கள் என நாங்கள் பிரச்சாரம் செய்தோம்.
என்ன காரணம் என்றால் அன்றைய சூழலில் நான்கு தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டும் என்பதால், ஆனால் அப்படி ஒரு பிழையை நாங்கள் செய்துள்ளோம் என காலப் போக்கில் அறிந்து கொண்டோம்.
படுகொலை வாக்கு மூலம்
பிள்ளையான் சிறையில் இருந்து வெளியே வந்ததன் பின்பு நிறைய சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கள், இயற்கை பசளையில் அவர் செய்த தரகு பணம், ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தியில் இரு இராஜாங்க அமைச்சர்களும் 45 கோடி ரூபாவுக்கு மேல் தரகுப் பணம் பெற்றதாக வந்த செய்திகள், பிள்ளையானின் பேச்சாளர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் சபையில் கொடுத்த அறிக்கைகள் இவர்கள் இராணுவப் புலனாய்வுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் யாரையெல்லாம் படுகொலை செய்தார்கள் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் அவர்களுக்கு சம்மந்தம் இருக்கின்றது என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இவ்விடயம் பரவலாக வெளிவந்துள்ளது. அதைவிட இங்கு மேலும் சில விடயங்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த உள்ளூராட்சி தேர்தலில் பெரிய வீழ்ச்சியை சந்திப்பார்கள் எனவும் தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
