விடுதலை புலிகளின் தலைவர் சொல்லிக்கொடுத்த சுயவொழுக்கம்! பின்பற்றி வாழும் மக்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொல்லும் சுய ஒழுக்கத்தினை புதுக்குடியிருப்பு வேணாவில், நேசன் குடியிருப்பு மக்கள் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர் என்று சமூக விடய ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார்.
குட்டிப்பிள்ளையார் ஆலயத்தில் அவர்களது செயற்பாடுகளை உதாரணமாக எடுத்துரைத்ததோடு அவர்களது வாழ்வியலையும் உற்று நோக்க வைத்து விளக்கியமையையும் நோக்கலாம்.
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் கருத்துக்களை தொகுத்து வெளியிடப்பட்டுள்ள "தலைவரின் சிந்தனைகள்" என்ற நூலையும் அதன் வழி சாதாரண தனிமனித வாழ்வியலை வாழும் பல தமிழர்களையும் தாயகத்தில் காணலாம் என மேலும் குறிப்பிட்டார்.
போரியல் நூலான சன்சூவின் போர்க்கலையை பொருளியலில் பயன்படுத்தி வலுவான வன்நாணயத்தை பெற்ற நாடுகள் உலகில் இருப்பதையும் உதாரணமாக யப்பனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குட்டிப் பிள்ளையார் கோயில்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உலகளந்த பிள்ளையார் ஆலய வீதியின் வழியே வேணாவில் போகும் போது வரும் முதல் சந்தியில் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோவிலுக்கு திரும்பும் திருப்பத்தில் அமைந்துள்ளது குட்டிப் பிள்ளையார் கோவில்.
2009 க்கு முன்னர் சிறிய கோவிலாக ஆலமரத்திற்கு கீழ் வைத்து சந்திப்பிள்ளையார் கோவிலாக வணங்கப்பட்டு வந்ததாகவும் அவ்வூர் மக்களில் சிலர் குறிப்பிட்டனர்.
இப்போது கட்டடங்கள் கட்டப்பட்டு கோவிலுக்கு மணியும் சுற்று வேலியும் மக்களின் முயற்சியால் அமைக்கப்பட்டது என்றும் மேலும் குறிப்பிட்டனர். அமைக்கப்பட்ட கோவிலை சுத்தமாகவும் அழகாகவும் பேணி பராமரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
குட்டிப் பிள்ளையார் கோவிலுக்கு பூசைகளை செய்து வரும் பூசகருக்கும் மக்களுக்கும் இயல்பான ஒரு ஒத்திசைவு இருப்பதோடு நல்ல தொடர்பாடலையும் பேணிவருகின்றனர்.
கோவிலுக்கு என்று பரிபாலனசபையோ அல்லது குழுக்களோ இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நேசன் குடியிருப்பில் இருந்து வேலைக்கு செல்லும் பலர் முதலில் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கி விட்டு தான் தங்கள் வேலைகளுக்கு செல்வார்கள்.தாமும் அப்படித்தான்.
இன்றும் அப்படியே தான் பயணித்த போது ஆலயத்தினை சுத்தம் செய்துவிட்டு வணங்கிச் செல்வதாகவும் குறிப்பிட்டார் நேசன் குடியிருப்பு வாசியொருவர்.
இவ்வாறே வேணாவில் மக்களும் நேசன் குடியிருப்பு மக்களும் ஒத்திசைந்து ஆலயத்தினை பராமரிப்பதாகவும் எல்லோருடைய விருப்பத்துக்குரிய கடவுளாக குட்டிப்பிள்ளையார் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மக்கள் சேர்ந்து ஆலயத்தினை கட்டிமுடித்ததாகவும் சுற்று வேலியையும் நிலத்திற்கான சீமெந்து தரையையும் அருகிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் செய்து தந்ததாகவும் அவர் குறிப்பிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிள்ளையார் எறும்பு வரும் அதிசயம்
குட்டிப்பிள்ளையார் ஆலய பிள்ளையாருக்கு நேத்தி வைத்து விட்டு அதனை செய்யாது விட்டு விட்டால் படுக்கையைச் சுற்றி பிள்ளையார் எறும்பு வந்து விடுமாம்.
ஒவ்வொரு நாளும் படுக்கையைச் சுற்றி இருக்கும் இந்த பிள்ளையார் எறும்புகளை காணும் போது நேத்தி செய்யவில்லை என்பதை உணர்ந்து அதனை செய்து விடுவோம். அதன் பின்னர் பிள்ளையார் எறும்புகள் படுக்கையை சுற்றி வருவதில்லை என்றும் குறிப்பிட்ட நேசன் குடியிருப்பாளர் தனக்கு அவ்வாறு இருமுறை நடைபெற்றதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
குட்டிப்பிள்ளையார் ஆலயத்தில் மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறனர்.
யார் ஒருவர் முதலில் ஆலயத்துக்கோ அல்லது அதன் வழியாக பயணிக்கும் போதோ ஆலயமும் வளாகமும் சுத்தம் செய்யப்படாது இருப்பதை அவதானித்தால் உடன் அதனைச் சுத்தம் செய்துவிட்டு போவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
குட்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பொங்கல் செய்ய விரும்பும் அடியவர்கள் முற்கூட்டியே ஆலய பூசகருக்கு அறியத்தருமாறு அறிவித்தல் ஒன்றையும் ஆலயத்தில் பார்வைக்கு வைத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இது பக்தர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை தவிர்க்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுயவொழுக்கம் பேணும் இயல்பு
அறிவுறுத்தல் ஒன்றை யாருடைய வற்புறுத்தலும் இன்றி சுயமாகவே பின்பற்றி வரும் ஒழுக்கப் பண்பே சுயவொழுக்கம் ஆகும்.
தன் செயற்பாடுகளை மற்றொருவர் காணமாட்டார் என்று தெரிந்த போதும் விதிமுறைவழி அறிவுறுத்தல்களை பின்பற்றி நடந்துகொள்ளும் இயல்பு சுயவொழுக்கத்தின் வழி நடப்பவர்களிடம் இயல்பாகவே பழக்கமாகி விடும் என சமூக விடய ஆய்வாளர் ஒருவரிடம் இது தொடர்பில் கேட்ட போது விளக்கியிருந்தார்.
குட்டிப்பிள்ளையார் ஆலயத்தில் மக்களின் பங்களிப்பு இயல்பானதாகவும் ஒத்திசைவானதாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆலய தேவைகளை மக்கள் இயல்பாகவே முன்வந்து செய்து கொள்கின்றனர்.
குறிப்பாக ஆலயத்தையும் அதனைச் சூழவுள்ள இடங்களையும் அவர்கள் தன்னிச்சையாகவே கருத்திலெடுத்து சுத்தம் செய்வதனை தொடர்ச்சியாக பேணி வருகின்றனர். இது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும் சுயவொழுக்கத்தை நினைவுபடுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயரிய தியாகங்களையும் பெரு வெற்றிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளால் பெற முடிந்தமைக்கு அவர்களிடம் இருந்த சுய ஒழுக்கமே முதன்மையான காரணமாக இருந்தது.
தனி மனித ஆளுமைகளை இனம் கண்டு அவற்றை தமிழீழ விடுதலைக்காக பயன்படுத்துவதில் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வெற்றி பெற்றமைக்கும் அவரால் போராளிகளிடையே ஊட்டி வளர்க்கப்பட்ட சுயவொழுக்கப் பண்பாடு தான் காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சுயவொழுக்கத்தின் விளைவுகளை கரும்புலிப் படையணியின் செயற்பாடுகளை ஆராய்ந்தால் நன்கு புலனாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய உலகில் தனிமனித மேம்பாட்டுக்கு ஒவ்வொரு தனிமனிதரும் தமக்கென நற்பண்பாடுகளை உருவாகி அதன் வழி நடக்க முற்பட்டால் வளமான வாழ்வை அமைதியாக அவர்கள் வாழ்ந்துவிட களம் அமைந்துவிடும் என தான் எதிர்பார்ப்பதாகவும் இந்த எண்ணத்தின் வழியில் தாயகத்தில் வாழும் பல தனிமனிதர்களையும் காணலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டமை நோக்கத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |