கார்த்திகை - 27 என்ன செய்ய வேண்டும்...!
ஈழத்தமிழர் வாழ்வியலில் ஒன்றிப்போன ஒரு விடயமாக கார்த்திகை - 27 அமைந்துவிட்டது.
யுத்தத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி கார்த்திகை பிறந்து விட்டால் இலங்கையின் அரச படைகள் புலனாய்வாளர்கள் பரபரப்பாகி விடுவார்கள்.
அவர்களைப் போலவே உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழரும் தங்கள் ஆர்பரிப்புக்களால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்து விடுவார்கள்.
கார்த்திகை - 27 போலொரு நிகழ்வை இந்த உலகம் என்றென்றும் சந்தித்ததில்லை என்பதை, தமிழர்களின் தனித்துவத்தை இந்த பூமிப் பந்தில் வாழும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதையும் ஈழத்தமிழர்கள் புரிந்துகொண்டு தங்களின் காய் நகர்வுகளை செய்ய வேண்டும்.
முதல் மாவீரன் சங்கர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர் லெப்.சங்கர்.(செல்வச்சந்திரன் சத்தியநாதன்).
1982 கார்த்திகை 27 அன்று தன்னுயிரை தலைவரின் மடியில் தலை சாய்ந்து ஈகம் செய்கிறார்.
இலங்கை இராணுவத்தினருடன் நடைபெற்ற மோதலில் விழுப் புண்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா கொண்டு செல்லப்பட்ட சங்கர் தன் இறுதி நாட்களை தமிழீழ தேசியத் தலைவருடன் கழிக்கின்றார்.
சங்கரின் வீரச்சாவடைந்த நாளான கார்த்திகை - 27 தமிழீழ மாவீரர் நாளாக 1989 கார்த்திகை -27 அன்றிலிருந்து நினைவு கொள்ளப்பட்டு வந்தது. 2008 கார்த்திகை - 27 வரை இது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட வீரமிகு நினைவு நாளாக இருந்தது.
தாயகப் பரப்பில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீரமிகு சாதனையாளர்களை நினைவுகொள்ளும் நாள் உலகப்பரப்பில் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைவரையும் நினைவு கொள்ளும் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சவால் மிகுந்த ஈழப்போராட்ட வரலாற்றில் வீரசாகசங்கள் அதிகம் இருப்பதனை உற்று நோக்க வேண்டிய காலம் மீண்டும் கனிகிறது என்றால் அது மிகையில்லை.
போராட்ட வடிவங்கள் மாறலாம்.போராட்ட இலட்சியம் மாறாது என்ற எண்ணவியல் கருத்தியலிலிருந்து ஈழத்தமிழர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாத போதும் அதே எண்ணவியல் கருத்துக்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அடுத்த சந்ததியினருக்கு போரின் அன்றைய தேவையும் விடுதலையின் அவசியத்தையும் நன்றே எடுத்து விளக்கி அவர்களை அவற்றை நன்கு அறிந்து புரிந்து சுயமாக நடைபோடும் விற்பன்னர்களாக முன்னகர அத்திவாரமிடும் பொறுப்பு நிகழ்கால ஈழத்தமிழர்களின் பெரும் பொறுப்பு ஆகும்.
நிகழ்கால வாழ்வியலில் உள்ள ஈழத்தமிழர்கள் தான் கடந்த கால போரியலை தங்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாக கொண்டு வாழ்ந்த வித்தகர்கள். அத்தகைய அனுபவங்களை தங்களிடத்தே கொண்டுள்ள அவர்கள் தங்கள் அனுபவங்களை இளையவர்களோடு பகிர்ந்து கொண்டு அன்றைய சூழலை விளங்கிக்கொள்ள வைத்துவிட வேண்டும்.
அன்றைய சூழலில் வாழ்ந்தவர்கள் எடுத்த முடிவுகள் மீது அன்றைய சூழலியலின் தாக்கம் எத்தகையது என்பதை இன்றைய இளையவர்கள் புரிந்து கொள்ளல் அவசியமாகும்.
ஈழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் இவ்வளவு கால முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீரைப் போல வீணாகிப் போய்விடும். இத்தகையதொரு முயற்சியில் எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் பெரும் பங்காற்றியிருப்தனை எடுத்துக் காட்டலாம்.
தீபச்செல்வனின் நடுகல் நாவல்
போரியல் அனுபவத்தை அந்த நடுகல் நாவலை வசிக்கும் ஒவ்வொருவரையும் அந்த சூழலுக்கே அழைத்துச்சென்று நியாயப்பாடுகளை ஆராய வைக்கின்றது.
புனைவுக்கதையாக நாவல் வடிவமைக்கப்பட்ட போதும் அந்த நாவல் வழி விரவிச்செல்லும் கதைக்களம் பல ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அனுபவம் என்பது மலைமேல் விளக்கெனலாம்.
இரு ஆண்பிள்ளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் கொண்ட கிளிநொச்சியில் வாழும் சிறிய குடும்பம் ஒன்று யுத்தத்தினால் சந்தித்த வாழ்வியல் சவால்களை அதனை அவர்கள் எதிர்கொண்ட முறைகளை, அவர்களோடு இடம்பெயர்ந்து வாழும் மக்களை,போராளிகளுக்கும் மக்களுக்குமான உறவு நிலையை, அந்த சிறிய குடும்பத்தின் மூத்த மகனை போராடத் தூண்டிய காரணிகளை என்று மிக நேர்த்தியாக புரிந்துகொள்ளும் வகையில் நியாயப்பாடுகளை ஆராயக் கூடிய முறையில் தீபச்செல்வன் தன் கதையை நகர்த்திச் சென்றுள்ளார்.
இந்த இது போன்ற இலக்கியப் படைப்புக்களை இங்கே சுட்டிக்காட்டல் அவசியமாகின்றது.ஈழப்போராட்ட வாழ்வியலை வெறுமனே எடுத்துச் சொல்வதிலும் இலக்கிய இரசணையோடு வாசகர்களிடம் (உலகத்து மக்களிடம்,ஈழத்து இளையவர்களிடம்) கொண்டு செல்வது இலகுவானது.
தேடலைத் தூண்டி விட்டால் தேடுபவர்கள் தாங்களாகவே தேடிக்கொள்வார்கள். அந்த வகையில் தீபச்செல்வனின் நடுகல் பற்றிய எடுத்துக்காட்டு இந்த கட்டுரைக்கு பொருத்தமானதாக நான் கருதுகின்றேன்.
இந்த ஒரு எடுத்துக்காட்டு போல் ஈழப்போராட்ட தேவையும் அதன் நியாயப்பாடுகளும் உலகப்பரப்பில் புரிந்து கொள்ளப்பட செய்ய வேண்டும்.
நிராஜ் டேவிட்டின் உண்மையின் தரிசனம் போல்
நிராஜ் டேவிட் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் தொடர் ஆய்வு விமர்சனப் பார்வை கொண்ட ஒரு புலம் தான் உண்மையின் தரிசனம்.
இன்றைய ஊடகப் பரப்பில் அனுபவம் வாய்ந்த நடுநிலை ஆய்வும் எதிர்வு கூறலையும் கனத்திருக்க கொண்டது உண்மையின் தரிசனம்.
இது பற்றி ஏன் இங்கே பேச வேண்டும் என்ற கேள்விக்கு பதிலே அந்தக் கேள்விதான் என்பது போல ஈழப்போராட்ட கால நிகழ்வுகள் பலவற்றை தெளிவாக இளம் ஈழத்து மனங்களுக்கு புரிந்திடக் கூடிய அதிலிருந்து தமக்குள் ஓர் ஆய்வினைச் செய்துவிடக்கூடிய ஆளுமையை இந்த தொடர் ஏற்படுத்திவிடுகிறது. அதில் மாற்றுக் கருத்திருந்து விடப்போவதில்லை என்பது உண்மை
கருணாம்மான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றதை,தமிழீழ விடுதலைப்புலிகளின் உளவியல் தன்மைகளை,உலகப்பரப்பில் ஈழத்தமிழருக்கு உதவக்கூடிய நிகழ்வுகளை என ஒரு பெரும் அறிவாற்றலை பொருத்தி பல ஆய்வுகளை முன்னெடுத்திருக்கின்றார்.
இவற்றை தேடி அறிந்து கொள்ளத் தூண்டிவிட வேண்டும் இன்றைய ஈழத்தமிழ் சிறார்களை.
நாளை தாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு அவர்கள் வாழும் சூழல் சொல்விட வைத்து விடும் இத்தகைய தேடல் மூலம் கிடைக்கும் அறிவாற்றல் என்பது திண்ணம்.
கார்த்திகை மாதம் மழை பொழியும் காலம்
பொங்கிடும் கடற்கரையோரத்திலே என்ற பாடலடியோடு தலைவரின் பிறந்த நாள் கார்த்திகை மாதத்தில் வருகின்றது என்று எண்ண வைத்திருக்கும். அந்த கார்திகையில் தான் மாவீரர் நாளும் வருகின்றது.
இறந்தவர்களை நினைவு கொள்ளும் ஒரு நாளை பேரெழுச்சியின் குறியீடாக கொண்டாடி மகிழ்ந்தவர்கள் ஈழத்தமிழர்கள்.
போரில் வீழ்ந்து விட்ட ஒரு வீரனுக்காக கண்ணீர் சிந்தும் வழக்கம் இல்லாத வீர மறவர்கள் என்று போற்றுதலுக்குரிய வகையில் வாழ்ந்தவர்கள். புதைகுழியில் புதைக்கப்பட்டவில்லை.
அவர்கள் விதைகுழியில் விதைக்கப்படுகின்றார்கள் என்ற மாற்றீட்டை பேணியவர்கள். வழமை போலவே கார்திகையில் எழுச்சி கொள்ளும் ஈழத்தமிழர் மனங்கள் தங்களை கொஞ்சம் புடம்போட்டுக் கொள்ள வேண்டியதொரு காலத்தில் வாழ்கின்றார்கள் என்பதை இங்கே சுட்டுவது காலத்தின் தேவையாகும்.
கார்த்திகையை மாதத்தில் மரங்களை நாட்டுதல், சிரமதானம் செய்தல்,எழுச்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், அதில் கலந்துகொள்ளல் போன்ற பல செயல்வழிகள் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஈழத்தமிழர்கள் இனி இவற்றொடு மற்றொன்றையும் சேர்த்து செய்து கொள்ளல் நலம் மிக்கதாக அமைந்து விடும்.
என்னதான் அது....?
ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றை தெளிவாக மற்றவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் செய்து விடலே அதன் நியாயப்பாடுகளையும் தேவைப்பாடுகளையும் மற்றாரும் புரிந்திட வைத்துவிடும் என்பது காற்றில் கலந்த நறுமணம் போல் ஆகும்.
காலையில் தாகம் எடுப்பதில்லை.அதனால் காலையில் தாகத்தின் தேவையை உணரும் அவசியம் இருக்காது.இதனால் தாகத்தின் வலிமிகு தேவை உணரப்படாது.
நண்கலில் சூழல் சூடாகி உடலை தாகத்தின் தேவையை உணர வைத்து விடுகிறது.நீரைக் குடிக்கும் வரை அந்த தாகத்தின் வலிமிகு தேவை உணரப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இங்கே தான் தவிச்ச வாய்க்கு ஒரு சொட்டு தண்ணீரும் அமிர்தம் என்பார்கள். இந்த போக்கைத் தான் இன்று ஈழ விடுதலைப்போராட்டம் எதிர்கொண்டு நிற்கின்றது என்றால் அது மிகையில்லை.
போராட்டத் தேவைகள் ஈழத்தில் இல்லை என்ற சித்தாந்தம் பேசப்படுவதால் அதனை உடைத்தெறிவதற்கு புரிதல்களை ஏற்படுத்த வேண்டும்.
நில ஆக்கிரமிப்பு,உரிமை மறுப்பு, தொல்பொருள் திணைகளத்தினரின் பொருந்தாத செயற்பாடு,பௌத்த பிக்குகளின் அடாவடித்தன போக்கு, உழலால் விளையும் பொருளாதார நெருக்கடியின் சுமைகள் என இன்றும் தாயகவாழ் தமிழர்கள் சுமக்கும் சுமைகளும் சவால்களும் சொல்லிச் செல்ல முடியாதவை.
தீர்வுகளின்றி தொடர்ந்து சென்ற வண்ணமே இருக்கின்றன. கத்தி கொண்டு யுத்தம் செய்யும் நிலை கடந்து புத்தி கொண்டு புதுயுகம் செய்திடல் வேண்டும்.
கார்திகையில் தீபமேற்றி ஒளியூட்டும் சம நேரத்தில் ஈழப்போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். அத்தகைய செயற்பாடுகளில் முதன்மை பெற வேண்டியவை
01) ஈழப்போராட்ட வரலாற்றுப் புத்தகங்களை நண்பர்கள் உறவினர்கள் மாவீரர் குடும்பங்கள் போன்றோருக்கு பரிசளிக்க ஊக்குவித்தல்
02) ஏனைய மொழிப்புலமை கொண்டோருடன் இணைந்து ஈழப்போராட்ட வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடுதல்
03) ஈழப்போராட்ட நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்தல்.
04) ஆய்வுக்குட்பட்ட ஈழப்போராட்ட வரலாறுகளை பக்கசார்பற்று இலக்கு நோக்கிய பாதையில் அதன் நேர்கோட்டு தன்மையை புரிந்து கொள்ளல்
05) எந்தவொரு நாட்டினை எல்லைக்குள்ளும் அந்த நாட்டுச் சட்ட ஏற்பாடுகளை புரிந்து நடந்து கொள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்களை ஊக்குவித்தல்
06) உலக நாடுகளின் அரசியல் மற்றும் இராணுவ புலனாய்வு பொருளியல் அறிவியல் போன்ற உயர் தகைமை வாய்ந்த துறைகளில் புலம்பெயர் தமிழர்கள் பங்கெடுப்பதை ஊக்குவித்தல்
07) பொருளாதார மற்றும் அறிவியலில் பலம் மிக்க சமூகமாக தமிழர் வளர்ந்து விடுதலை நேர்கோடாக்கல்
08) உலகப்பரப்பில் இலங்கையின் செயற்பாடுகளை அநாகரீகமாக விமர்சிப்பதை தவிர்க்க ஊக்கமளித்தல்.
போன்ற சில விடயங்களை முன்வைத்து கார்திகையில் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லலாம்.
இந்த விடயங்கள் சார்பாக துறைசார் வல்லுநர்களின் வழிகாட்டல் அவசியம் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாகும்.
2023 கார்திகை - 27 இந்த வருடம்
இந்த வருட மாவீரர் நாளினை உலகப்பரப்பில் கொண்டாட தயாராகி வரும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களிடத்திலும் ஈழப்போராட்ட வரலாற்றினை எடுத்துச்செல்லும் வழிகளை ஆராய்ந்து அதனை ஒரு இலக்காக முன்னெடுக்க முயற்சிக்கலாம்.
உதாரணமாக மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தியவழித் தமிழர்கள் பரம்பரை பரைம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.
சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் தமிழை அரச அலுவல்கள் மொழியாக அந்த நாடு அறிவித்ததையும் இங்கே சுட்டலாம்.
அந்த நாட்டு நூலகங்களிலும் அந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் ஈழப்போராட்ட வரலாற்று நூல்களை கொண்டு சேர்க்கும் போது ஈழவிடுதலைபோரின் நியாயப்பாடுகளை அவர்களால் புரிந்து கொள்ள ஒரு களம் கிடைத்து விடும்.
இது உலகப்பரப்பில் ஈழத்தமிழர் ஆதரவு நிலையை தோற்றுவிக்கும்.
எதிர்கால நகர்வுகளை இவை இலகுவாக்கி விடும் என்பது உள்ளார்ந்த ஒரு எதிர்பார்ப்பு. மாவீரர் நாள் நினைவஞ்சலிக்காக நண்பரொருவருக்கு அல்லது நூலகம் ஒன்றுக்கு ஈழத்தமிழர் போராட் வரலாற்று நூலினை நன்கொடையளித்து விடலாம்.
வரலாற்றுத் தேடலுக்கு தீனி போடும் களங்கள்
நிராஜ் டேவிட் அவர்களின் உண்மையின் தரிசனம், நிதர்சனம், இஸ்ரேலிடமிருந்து ஈழத்தமிழர்கள் கற்க வேண்டிய பாடம் தொடர்,தீபச்செல்வனின் நடுகல்,பயங்கரவாதி, நதுநசியின் தடம் தந்த வரிகள், மணலாறு விஜயனின் வணங்காமண்,மௌனப்புதைகுழிகள், மணலாறு, ராகவன் மற்றும் மருதன் ஆகியோரின் ஈழம் சார்ந்த நூல்கள்,படிப்பு,நூலகம் இணையங்கள்,என்று ஏராளமானவை ஈழப்போராட்ட வரலாற்றை தேடுவதற்காக உலகப்பரப்பில் உள்ளன.
தினமுரசு வார இதழில் வெளியான வரலாற்றுத் தொடர்,முறிந்த பனை,அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை, அன்ரன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதமும், விடுதலை போன்றவற்றையும் சுட்டுச் சொல்ல முடியும்.
நேர் மற்றும் எதிர் மறைக் கருத்துக்களால் பெற்றுக் கொள்ளப்படும் தேர்ச்சி மிக்க தீர்மானமான முடிவுகள் வழி நடந்திட வழி சமைக்கும் இந்த தேடல்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் என்றால் அது மிகையில்லை.
இந்த வருட கார்த்திகையில் தீபமேற்றலொடு ஒரு புத்தகத்தையும் பரிசளிப்போம் என்ற உறுதிப்பாட்டை ஒவ்வொரு ஈழத்தமிழரும் எடுப்பார்களானால் ஈழப்போராட்ட வரலாற்றை தேடுவதற்கான நூல்களால் நூலகங்களை நிறைத்து விடலாம்.
கடந்த காலம் சிறிதாயினும் கடக்கவிருக்கும் காலம் நீளமானது.
சொன்ன வழியில் மெல்ல நகரும் ஈழத்தமிழினம்
நீண்ட காத்திருப்பு என்ற சிங்கள மொழிமூல மூலக்கதையை தமிழில் படிக்க கிடைக்கிறது.இது சிங்கள கடற்படை அதிகாரியாக கடமையாற்றிய கடற்படை வீரர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடற் சமரொன்றில் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட போது தன் விடுதலை வரையான சுயசரிதை போலமைந்த நாவலாகும்.
மற்றொரு வகையில் இது விடுதலைப்புலிகளுடனான அவரது அனுபவங்களை கொண்டது எனலாம்.
இரண்டாம் உலகப்போரின் போது கிட்லரால் தூக்குமேடைக்கு அனுப்பப்பட்ட ஒரு கைதி தான் இறக்கும் வரை,அதாவது தூக்குமேடைக்கு போகும் வரை எழுதிய தன் அனுபவங்களை அவரது மனைவி சேர்த்து தொகுத்த " தூக்குமேடை குறிப்புகள்" என்ற நூலுக்கு ஒப்பானதாக இதனை நோக்க முடியும்.
இதன் அனுகூலம் இந்த நூலை சிங்கள மக்களும் படிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது தான்.அந்த வாக்கு மூலம் ஒரு சிங்கள கடற்படை அதிகாரியால் சொல்லப்பட்டது தான்.
இது ஈழப்போராட்ட சூழலை. ஈழப்போராளிகளை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
இது போலவே அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்ட தீபச்செல்வனின் " நான் சிறிலங்கன் இல்லை " என்ற தமிழ் மூலமொழி நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலை குறிப்பிடலாம். அந்த நூல் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை கவிப்புலத்தினூடாக சிங்கள மக்களிடமும் கொண்டு சேர்க்கும் என்று நம்பலாம்.
தமிழ்க் கட்சிகள் மாற்றம் காணுமா?
தாயகப் பரப்பில் அரசியல் செய்யும் தமிழ்க் கட்சிகள் தங்கள் கொள்கைகளில் சில மாற்றங்களை இனி கண்டாக வேண்டும்.
எதிரும் புதிருமாக சிங்களக் காட்சிகளோடு மல்லுக் கட்டுவதைப் போல சிங்கள மக்களோடும் நெருங்கிப் பழகி அவர்களின் நலன்களிலும் சற்று கவனமெடுத்து செயற்பட்டு அவர்களது மனங்களில் இடம் பிடித்து ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்த முனைய வேண்டும்.
மெல்ல நகர்ந்தாலும் நேர்கோட்டுவழித்தடத்தை இலக்கு நோக்கியதாக அமைத்து விட்டால்
கார்த்திகை - 27 பெறுமதிமிக்க நாளாக அமைந்து விடும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 23 November, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.