துயிலுமில்லத்தில் கஜேந்திரகுமாருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல்
அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் (Gajendrakumar Ponnambalam) காவல்துறையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று (27) மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.
இதன்போது, மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் என்று நம்பிக்கையுடன் அங்கு சென்ற மக்களிடம் காவல்துறையினர் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முற்பட்டுள்ளனர்.
சிறு பதற்றநிலை
அத்துடன், அங்கு சென்ற வாகனங்களின் வாகன இலக்க தகடுகள் காவல்துறையினரால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் காவல்துறையினர் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |