நாய் வாலை நிமிர்த்த முடியாது
சிறிலங்காவின் முதன்மைத் தலையாடி அதிபர் ரணில் விக்ரமசிங்க என்ன தான் பேச்சு பல்லக்குகளை காவி வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் நில அளவீடுகளுக்கு தற்காலிகமான தடையை விதித்துக் கொண்டாலும், அதே கொழும்பு அதிகாரம் மையத்திலிருந்து நாய் வாலை நிமிர்த்த முடியாத சில நகர்வுகளும் தொடர்ந்தும் வெளிப்படவே செய்கின்றன.
அந்த வகையில், இலங்கையில் தமிழர் தாயகத்தின் இனப் பரம்பலை மலினப்படுத்துவதற்கும், சிங்கள குடியேற்றங்களை தமிழ் தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் நாசுக்காக நகர்த்திக் கொள்வதற்கும் உரிய நகர்வுகள் வரத்தான் செய்கின்றன.
ஜே வலய திட்டம்
அதன் ஒரு அங்கமாக, தற்போது மகாவலி அதிகார சபையின் ஜே வலய திட்டம் உருவாக்கப்படுகிறது.
இந்த ஜே வலய திட்டம் இப்போது தமிழர்களின் பூர்வீக இருப்பை வளையம் கட்டத் தலைப்படுகிறது.
அதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 கிராம சேவகர் பிரிவுகள், மன்னார் மாவட்டத்தில் 30 கிராம சேவையாளர் பிரிவுகள் என செல்லத் தலைப்படுகின்றது மகாவலி அதிகார சபையின் இந்த ஜே வலய திட்டம்.
ஆக மொத்தம், தமிழர் தாயகத்தில் மொத்தமாக 37 கிராம அலுவலர் பிரிவுகளை ஏப்பமிட்டு வடமாகணத்தில் பதியமிட தயாராகிவிட்டது இந்தத் திட்டம்.
தமிழர்களை பொறுத்தவரை அவர்களது வரலாற்றுப் பட்டறிவில் இதே மகாவலி அதிகார சபை ஏற்கனவே பல தில்லாலங்கடிகளை செய்திருக்கிறது.
தமிழ் மக்கள் கந்தக நாசக்கார போரால் இடம்பெயர்ந்து சென்ற நிலையில், இதுதான் தருணம் என மணலாற்றுப் பகுதியில் சிங்களக் கொடியேற்றங்களை நிறுவி, அதற்காக வெலி ஓயா என்ற ஒரு புதிய பிரதேச செயலகத்தையும் உருவாக்கியது இதே மகாவலி அதிகார சபையின் சூட்சுமங்கள் தான்.
சிங்களக் குடியேற்றங்கள்
இப்போது அதே சூட்சுமங்கள் நல்லிணக்கப் போர்வையில் ஜே வலயம் என்ற புதிய கபளீகரம் ஊடாக சிங்கள மக்களை குடியேற்றும் நகர்வுகளை மிக வேகமாகச் செய்ய மகாவலி அதிகார சபை தலைப்படுகின்றது.
தமிழர் தாயகத்தை பொறுத்தவரை 1988 இல் உருவாக்கப்பட்ட மகாவலி எல் வலையத்திற்கு 35 வருடங்கள் கடந்து கொண்டாலும், அந்த எல் வலயத்திற்காக காரணம் கூறப்பட்ட மகாவலி நதி நீர் இன்னமும் அந்த வலயத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
ஆனால் அந்த வலயத்தில் புதிய புதிய சிங்களக் குடியேற்றங்கள் பல ஏற்கனவே முளைத்து விருட்சமாக வளர்ந்து விட்டன.
அதே சூட்சுமத்தில் தான் இப்போது மகாவலி நீரைக் கொண்டு வரும் திட்டம் இல்லாவிட்டாலும், அந்த நீரை மையப்படுத்தி மகாவலி ஜே வலயத்தை ஏற்படுத்த மகாவலி அதிகார சபை தலைப்படுகிறது.
