கொழும்பில் மகிந்தவுக்கு ரணில் வழங்கியுள்ள 400 மில்லியன் மதிப்புள்ள வீடு!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்து தமக்கு கொழும்பில் தங்க வீடு இல்லை எனக் கூறி வந்த நிலையில், இப்போது அது முற்றிலும் பொய் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் வெளியான ஆதாரங்களின்படி, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர், கொழும்பில் சுமார் ரூ. 4000 லட்சம் (400 மில்லியன்) மதிப்புடைய ஆடம்பர இல்லத்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடு ஆரம்பத்தில் தொழிலதிபர் ப்ரபாத் ரவீந்திர நானாயக்காரவின் உடமையாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
மகிந்தவின் அதிர்ஷ்ட இல்லம்
2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின், அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூலம், எதிர்க்கட்சி தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு தற்காலிகமாக இவ்வீடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பின்னர், வீடு திருப்பிக் கொடுக்குமாறு பலமுறை கோரப்பட்ட போதிலும், மகிந்த ராஜபக்ச அதனை மறுத்து, “எனது அதிர்ஷ்ட இல்லம்” எனக் கூறி தொடர்ந்தும் பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைதொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின், 2013 ஆம் ஆண்டு, இந்த வீடு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ச மேரி லூட்ஸ் விக்ரமசிங்க என்ற பெயருக்கு சட்டபூர்வமாக எழுதப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், வீடு வாங்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்குரிய உரிமையாளருக்கு பணம் வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமாற்றப்பட்ட மக்கள்
மேலும், 2011 ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச தொடங்கிய Carlton Sports Network (CSN) ஊடக நிறுவனமும் இவ்வீட்டின் முகவரியைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமும் கொழும்பில் வசிப்பதற்கு பிரம்மாண்டமான வீடு வைத்திருப்பது தெளிவாக உறுதி செய்யப்படுகிறது.
இதன்படி, கொழும்பில் வீடு இல்லை என தொடர்ந்து மக்களை ஏமாற்றி கூறியமை பொய் எனவும், மக்கள் இதை உணர வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
