ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா !
ஈழத்தில் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவு ஈழத் தமிழர்களின் நிமிர்வின் இடமாகவும் விடுதலைப் புலிகளின் வீரத்தின் அடையாளமாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
இதனால் 2009 இற்குப் பிந்தைய காலத்தில் ஆனையிறவின் அடையாளத்தை மறைக்கவும் சிதைக்கவும் மாறி மாறி ஆளும் சிறிலங்கா அரசு சில சதிகளில் ஈடுபட்டே வருகின்றது.
இந்த நிலையில் 2009இற்குப் பிறகான காலத்தில் மகிந்த ராஜபக்ச அரசு ஆனையிறவின் அடையாளத்தை அழிக்க மேற்கொண்ட முயற்சியை தற்போதைய அநுர அரசு வேறு வடிவில் தொடர்கிறதா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இராணுவ அடையாளத்தைப் பூசலாமா ?
ஆனையிறவு இலங்கைத் தீவின் மிக முக்கியமான உப்பு வயல். இயற்கை உப்பு உருவாகும் இந்தப் பகுதி பெரும் பொருளாதாரத்தை ஈட்டித் தருகின்ற வளமான பகுதி. ஆனையிறவு உப்பு உலகம் முழுவதும் பிரசித்தமானது. இயற்கையான இந்த உப்பின் பிரசித்தம் விடுதலைப் புலிகளின் வீரம் தாக்குதல்களால் இன்னும் ஆனையிறவை இன்னும் அறியச் செய்திருக்கிறது.
ஆனையிறவு வெற்றிக்குப் பின்னொருநாள் பள்ளி மாணவர்களாக அந்தப் பகுதியைப் பார்க்கச் சென்றிருந்தவேளை, உப்பு வயல்க் கரைகளில் திரண்டிருந்த உப்பை அள்ளி இது என் பிள்ளை உள்ளிட்ட எங்கள் வீரர்களின் உதிரமல்லவா என்று விழி பொசிந்து நின்ற தாயொருத்தி இன்னமும் என் நினைவில் இருக்கிறாள்.
இப்படியிருக்க ஆனையிறவில் இராணுவத்தின் அடையாளத்தைப் பூசலாமா? அது ஈழத் தமிழ் மக்களை பெரும் சீற்றித்திற்கும் துயரத்திற்கும் தள்ளுமல்லவா? சில வருடங்களின் முன்னர் ஆனையிறவு இராணுவத் தியாகத்தை வெளிப்படுத்தும் சுற்றுலாத்தளம் என்று இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.
அரசுக்கும் இராணுவத்திற்கும் ஆனையிறவின் அடையாளங்களை மாற்ற வேண்டும் என்பதும் அங்கு தம்மால் உருவாக்கப்படுகிற கதைகளை உருவாக்க வேண்டும் என்பதும் பெரும் பேரினவாதக் கனவாக விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரயத்தன முயற்சியாக இருக்கிறது.
இதன் ஒரு வெளிப்பாடுதான் ஆனையிறவு உப்பின் பெயரை சிங்களத்தில் மாற்றுகின்ற முயற்சி. அதற்கு ஈழத்தில் மாத்திரமின்றி உலகம் முழுவதும் தமிழ் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அதனை மாற்றுவதாக அரசு வாக்குறுதி அளித்துள்ளது. ஏன் இந்த ஆனையிறவு இப்போதும் இலக்கு வைக்கப்படுகிறது என்பதைக் குறித்தான கரிசனை அவசியம்.
நினைவுகளை கிளரும் ஆனையிறவு
ஆனையிறவு வரலாறு முழுவதும் முக்கியமானதொரு பகுதியாக இருந்துள்ளது. போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள், பிரித்தானியர்கள் என இலங்கையை ஆதிக்கம் செலுத்தியவர்கள் இப் பகுதியை தமது கோட்டையாக வைத்திருந்தனர். அதன் பின்னர், இலங்கை இனப்பிரச்சினையின்போதும் ஆனையிறவு யாருடைய கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே இராணுவ பலம் தீர்மானிக்கப்பட்டது.
அதுவே அரசியல் பலமுமாகும். ஆனையிறவை விடுதலைப் புலிகள் கைப்பற்றிய நிகழ்வு அந்த இயக்கத்தின் போராட்ட நகர்வுகளில் முக்கியமானதாக அமைந்ததுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலம் குறித்த பிரமிப்பு தெற்கில் மாத்திரமின்றி உலக அளவிலும் கவனமானது. பின் வந்த அரசியல் சூழலையும் இந்த இராணுவ பலமே தீர்மானித்தது.
ஆனையிறவு என்றாலே விடுதலைப் புலிப் போராளிகளின் இரத்தமும் உப்பு வயல்களுக்குள் நகர்ந்து செல்லும் இரவுகளும்தான் எமக்கு ஞாபகத்திற்கு வருகின்றன. நித்தமும் வெடிக்கும் குண்டுகளின் சத்தங்கள் ஆனையிறவில் இருந்து கேட்கும். அந்நியர்களால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவை இருநூற்று நாற்பது வருடங்களின் பின்னர் ஈழப் போராளிகள் கைப்பறினார்கள் என்ற செய்தி நவீனத் தமிழர்களின் வீரக் கதை என்று தமிழனம் கொண்டாடியது.
யுத்த நினைவுத் தூபி
ஆனையிறவின் அழகும் உப்பளத்து தொழிலும் தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவை. ஈழத்தில் வடக்கில் முக்கியமான வளம் கொழிக்கும் கடல்நிலமாக ஆனையிறவு துலங்குகிறது. ஈழத்தின் வடக்கில் யாழ் குடநாட்டையும் வன்னிப் பெருநிலப் பரப்பையும் இணைக்கிற இந்த கடலோசரச் சமவெளி கிளிநொச்சி மாவடத்திற்குள் அடங்குகிறது.
இலங்கையிலேயே உள்ள மிகப்பெரிய உப்பளம் இது என்று கூறப்படுகிறது. கடலும் உப்பு வயல்களும் வெளியும் சூரிய வெளிச்சமும் காற்றும் என்று மனதை கவர்ந்து கொள்ளையிடும் அழகிய பிரதேசமாக காட்சியளிக்கிறது.
ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி ஈழ மண்ணில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தை காட்டி தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது. இத்துடன் ஆனையிறவு இப்பொழுது சிங்கள சுற்றுலாப் பயணிகளின் உல்லாசத் தளங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்பதையும் ஈழ மக்களின் கனவு எவ்வளவு கொடுமையாக கொல்லப்பட்டது என்பதையும் சொல்லும் அந்த யுத்த நினைவுத்தூபியை எந்தத் தமிழர்களும் இதுவரையில் ஏறி நெருங்கிச் சென்று பார்த்ததில்லை.
சிங்கள சுற்றூலப் பயணிகள் அதை சுற்றி சுற்றி வருகிறார்கள். அந்த தூபியைச் சுற்றி வன்னி யுத்தக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. யுத்தக் கதைகள் எவ்வளவு கொடுமையானவை? அவற்றால் இன்றும் எமது காயங்கள் ஆறாது சிதலும் குருதியும் ஒழுகிறது என்பது இந்தக் கதைகளையும் ஓவியங்களையும் படிப்பவர்களுக்குப் புரிவதில்லை. அவற்றை ரசித்து வீரப்படைகளின் சாகசங்களை கொண்டாடும் ஆக்கிரமிப்பின் குறியீட்டை இன்று ஆனையிறவு தாங்கி வைத்திருக்கிறது.
மூவாயிரம் போராளிகளின் குருதி
ஆனையிறவை காலம் காலமாக அந்நியப் படைகள் ஆண்டு வந்தன. 1760 ஆம் ஆண்டு போர்த்துக் கேயர் அமைத்த படைத்தளம் முதல் 1952 ஆம் ஆண்டு இலங்கைப் படை அமைத்த படைத்தளம் என்று ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாக இருந்த ஆனையிறவு பின்னர் 2000ஆம் ஈழத் தமிழ் போராளிகளிடம் வீழ்ந்தது.
1991இல் ஆகாயக் கடவெளிச் சமர் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்ற கடும் சமரில் ஈடுபட்ட பொழுதும் அது தோல்வியில் முடிவடைந்தது. அந்த யுத்தம் ஒரு மாதம் வரை நடந்தது. பின்னர் ஏப்பிரல் 22ஆம் நாள் 2000 ஆம் ஆண்டு நடத்திய ஓயாத அலைகள் சமரில் ஆனையிறவு ஈழப் போராளிகளின் வசமானது.
அதுநாள் வரை இதற்காக சுமார் 3000 ஈழப் போராளிகள் களப்பலியானார்கள். ஆனையிறவு ஒரு இரத்தச் சமவெளியாயிற்று. சிறிய வயதில் அந்தப் பகுதியால் லொறி ஒன்றில் நான் செல்லும் பொழுது நான் வந்த லொறியை ஓட்டியவரை ஏதோ சுடும் பகுதியில் காலை வைக்கும்படி இராணுவத்தினர் பணித்தனர். அந்த நாட்களில் சோதனைகளும் விசாரணைகளும் நீண்டு கொண்டு செல்லும்.
சிலர் அந்த சந்தர்பங்களில் காணாமல் போவார்கள் என்று என்னை அழைத்துச் சென்ற அம்மம்மா சொன்னார். பெருங்கோட்டையைப்போல இராணுவக் குடியிருப்புக்கள் கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கும். உயர உயர உப்பு மேடுகள் கூட்டட்பட்டு மூடப்பட்டிருக்கும்.
ஈழத்து மக்களின் இனப்பிரச்சினைக் காலத்தில் ஆனையிறவு எப்பொழுதும் மூடுண்டே இருந்தது. அதனால் யாழ்ப்பாண மக்களும் வன்னி மக்களும் பயணம் செய்து கொள்ள பெரும் சிரமப்பட்டடார்கள். அந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்திய கிளாலி பாதையிலும் மக்கள் கொலை செய்யப்பட்டு கடலில் எறியப்பட்டார்கள்.
இந்தப் பகுதியை மீட்கும் சமர்களுக்கான வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போராளிகளின் துயர்க்கதைகள் கொடுமையானவை. அதேவேளை திகிலும் சாதூரியமும் நிறைந்தவை. 2009 ஜனவரி 10 இல் இலங்கை இராணுவம் மீண்டும் ஆனையிறவை கைப்பற்றியது. பரந்தனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முகமாலை, நாகர்கோவில், பளை, இயக்கச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளை விட்டு விடுதலைப் புலிகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து ஆனையிறவில் மீண்டும் இராணுவம் நுழைந்தது.
வரலாற்றை திரிக்க இயலுமா?
90களில் ஆனையிறவு முன்னரங்க களத்தில் வெடிகுண்டு தாங்கிய போராளி ஒருவர் இராணுவத்தின் நிலைகளை நோக்கி நகர்ந்த பொழுது மரணம் அடைந்தார். அவரின் நினைவாக போராளிகள் ஆனையிறவை மீட்ட பொழுது அந்தப் போர்த்தாங்கியை நினைவுச் சின்னமாக்கினார்கள். ஆனையிறவுக்காக இரத்தம் சிந்திய எல்லாப் போராளிகளையும் அது கண்ணுக்கு முன்னால் கொண்டு வருகிறது.
போராளிகள் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்து நகர்ந்தார்கள் என்ற தீரங்களையும் அது சொல்கிறது. இன்று அதனை சிங்கள மக்களின் ரசனைக்கு படைகள் தீணியாக மாற்றியுள்ளன. அதில் மோதி பலியான இராணுவத்தினனின் கதை எழுதப்பட்டுள்ளது. அந்தக் கதை இப்படித்தான் இருக்கிறது. ' சிறிலங்க சிங்க றெஜிமன்டில் - கோப்ரல் காமினி குலரத்ன வை ஜி (பரம வீர விபூஷன) இல்லாவிட்டால் ஹசல வீரயானன் என்ற உன்னதமானவரால் அழிக்கப்பட்ட தீவிரவாதிகளின் புல்டோஸராகும். தாய் நாட்டின் பேரில் உயிர் தியாகத்திற்காக பல உன்னத மனிதர்கள் உதயமானார்கள் இம்மண்ணில்.
அந்த மாவீரர்களைப் பாதுகாக்கவும் தாய் நாட்டின் விடுதலைக்காகவும் தன்னுயிரையே தியாகம் செய்த இம்மண் பெற்றெடுத்த ஒரே ஒரு தவப்புதல்வன் நீயே... மிலேச்சப் பயங்கரவாதிகளினால் 1991 ஜீலை 13ஆம் திகதி இரவு ஆயிரக்கணக்கான வெடிபொருட்களைப் பொருத்தி இம்முகாமுக்கு அனுப்பப்பட்ட புல்டோஸர் இப்படி தங்கள் இனவாதத்தையும் ஆக்கிரமிப்பையும் படைகள் எழுதிவைத்துள்ளன.
ஆனால் இன விடுதலைக்காகவும் ஆக்கிரமிப்புமுகாங்களை அழிப்பதற்காகவும் இராணுவமுகாமுக்குள் நுழைந்த போராளியின் முகம் அழிக்க முடியாதபடி இந்தப் போர்த்தாங்கியில் படிந்திருக்கிறது. அந்த போர்த்தாங்கியினைச் சுற்றி இராணுவத்தினரின் இராணுவ உணவகங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
போர்த்தாங்கியை பார்வையிட்டு அதன்மீதெழுதப்பட்ட குறிப்புக்களை படித்து உண்டு ஆறிச் செல்வதற்கான பல வசதிகள் காணப்படுகின்றன. சுற்றுலாத்தளம்போல அழிவு அழகுபடுத்தப்பட்டிருக்கிறது. சிங்களவர்களுக்கு அது இராணுவச் சிப்பாயை நினைவுபடுத்த ஈழ மக்களுக்க விடுதலைப் புலி வீரனை நினைவூட்டுகிறது. இப்படியான முக்கியத்துவங்களால், ஈழ மக்களின் வீரத்தால் அடையாளம் பெற்ற ஆனையிறவின் நிறத்தையும் பெயரையும் வரலாற்றையும் மாற்ற சிங்கள அரசுகள் முயல்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 05 April, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 10 மணி நேரம் முன்
