நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வயதெல்லை -மகிந்த விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயதெல்லை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயதெல்லை வரையறுக்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எங்கு தவறு விடப்பட்டிருக்கிறது
அரசியல்வாதிகளுக்கு 75 வயது வரையில் கடமையாற்ற முடியும் என நான் நினைக்கிறேன். இளைஞர்களால் மட்டுமே அரசியல் செய்யமுடியும் என்று நான் கூறவில்லை. இளைஞர்களுக்கும் வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அன்று இளைஞர்களாக வந்தவர்களே, 70 வயதை தாண்டியும் இன்றும் அரசியலில் இருக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயதெல்லை வரையறுக்கப்படவில்லை. எங்கு அந்த தவறு விடப்பட்டிருக்கிறது? 4 தடவைகள் மாத்திரம் தான், நாடாளுமன்றத்துக்கு போட்டியிடலாம் என்ற வரையறை ஏன் விதிக்கப்படக்கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் விருப்பத்துக்கமைய, தேர்தலை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை. வீசப்பட்ட பந்தில் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்துள்ளார் என நடுவர் அறிந்திருந்த போதிலும், ஆட்டமிழப்பு கோரிக்கை விடுக்கப்பட்டால் மாத்திரமே அவரால் தீர்ப்பு வழங்கப்படும்.
அதுபோலதான், கோரிக்கை விடுக்கப்படாமல் தேர்தல் ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்க முடியாது. இங்கு ஆணைக்குழு உறுப்பினர்களே நடுவர்கள் என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.
