இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்ய முக்கிய காரணம் : வெளியானது தகவல்
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கையில் கிரிக்கெட்டை தடை செய்ததற்கு முக்கிய காரணம் தன்னிச்சையான அரசியல் தலையீடுகளே என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தீர்மானம்
இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் இன, மத பேதமின்றி ஒன்றிணைக்கும் இடம் கிரிக்கெட் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
கிரிக்கெட் சபை நிர்வாகத்தை அகற்ற வேண்டும் என்று முழு நாடாளுமன்றமும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிரிக்கெட் சபையில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள். கிரிக்கெட் சபையில் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களிலும் இதுபோன்ற பல மோசடிகள் நடப்பதை இன்றைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது.
நாடாளுமன்றம் அதனை செய்ய வேண்டும்
இந்நிலையை மாற்ற வேண்டும், நிறுவனங்களின் தலைவர்களை மாற்றுவதன் மூலம் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்றால், நாடாளுமன்றம் அதனை செய்ய வேண்டும்.
ஊழல் மற்றும் மோசடி போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் விடை காண வேண்டும். இந்த மோசடி மற்றும் ஊழலால் தான் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.