ரணில் - மைத்திரி இரகசிய சந்திப்பு : அநுர அரசிற்கு ஏற்படப்போகும் சிக்கல்
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் (Maithripala Sirisena) கலந்துகொண்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardhana) தலைமையில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தோல்வி உறுதி
இந்த கலந்துரையாடல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த (Premnath C. Dolawaththa) தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் தோல்வி உறுதியாகிவிட்டது.
ஒருபுறம் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், மறுபுறம் உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கள்வர்கள் என விமர்சித்த எமது உறுப்பினர்களிடம் பேரம் பேசி, அவர்களின் ஆதரவுடன் சபைகளை நிறுவுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதிகாரத்துக்காக எதையும் செய்யும் சம்பிரதாயபூர்வ அரசியலிலேயே அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் உப்பு தட்டுப்பாடு
சகல எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைத்து மக்களுக்கான சேவைகளை வழங்குவோம். அரசாங்கம் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நாம் தலையிடப் போவதில்லை.
ஆனால் எதிர்க்கட்சிகள் 50 சதவீதத்தை பெற்றுள்ளவற்றில் நிச்சயம் நாம் ஆட்சி அமைப்போம். குரங்குகள் சனத்தொகை கணக்கெடுப்பைப் போன்று நடைமுறை சாத்தியமற்ற திட்டங்களை தவிர, பிரயோசனமான எந்தவொரு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
ஆங்கிலேயர் ஆட்சியின் பின்னர் முதன்முறையாக இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில், மக்களின் செய்தியை எதிர்க்கட்சிகள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
