மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன
யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அதிபரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்புக்குரிய மாவை சேனாதிராஜாவை சந்தித்துள்ளார்.
இன்றையதினம் (30.06.2023) மாலை மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள மாவை சேனாதிராஜா அவர்களின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
மாவையின் கோரிக்கை
கடந்த 2015 ஆம் ஆண்டு அதிபராக இருந்த காலத்தில் இருதரப்பும் இணைந்து தமிழ் மக்களுக்கான தேவைகள் மற்றும் தீர்வுகள் சார்ந்து பணியாற்றியமை தொடர்பாக இருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் மக்களது தீர்வு விடயத்திலும், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலும் கட்சிரீதியாக ஆதரவு கொடுக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொண்டார்.
பதிலளித்த மைத்திரிபால
இதற்குப் பதிலளித்த மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
தமிழ் மக்களது தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சனைகளான காணி விடுவிப்பு, அபிவிருத்தி இடைவெளி என்பவற்றை எனது ஆட்சிக்காலத்தில் பெருமளவில் தீர்த்து வைத்திருந்தேன்.
அபிவிருத்தி பணிகளை கூட கட்சி பேதமில்லாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஊடாக செய்திருந்தேன்.
90 வீதமான காணிகளை விடுவித்திருந்தேன். இப்போதும் இலங்கையர் என்ற ரீதியில் எனது அக்கறை தமிழர்கள் மீது உள்ளது என தெரிவித்ததோடு, இந்த பயணத்தின் ஊடாக மீதமுள்ள காணி விடுவிப்பு, மீனவர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக அறிந்து கொள்வதே எனது நோக்கம் என தெரிவித்தார்.
சந்திப்பில்
இச்சந்திப்பின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் கௌரவ. சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, முன்னாள் பிரதி நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாருமான நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. சாரதி துஷ்மந்த மித்ரபால அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மேற்கு அமைப்பாளர் திரு. தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)