காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி! ஒருவர் கைது
புதிய இணைப்பு
வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கி வைத்திருந்த குறித்த சந்தேக நபர், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாள் மற்றும் ஒரு காருடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
புத்தளம் (Puttalam) - வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (31) காலை 10.30 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, காரில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்
இது குறித்து மேலும் தெரியவருகையில், “காரில் பிரவேசித்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை காரால் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.
அதன்பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்ளை கூரிய ஆயுதத்தினால் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக குறிப்பிடப்படுகிறது
மற்றைய நபர் மீது காரில் பிரவேசித்த இனந்தெரியாதவர்களால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நிலுவையில் உள்ள வழக்கு
உயிரிழந்தவர் மேல்நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், வென்னப்புவ காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட சென்றவர் என்று தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் கையொப்பமிட்டதன் பின்னர், அவரும் மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போதே, குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ரிவோல்வர் ரக துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை உயிரிழந்தவரின் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
