மண்டைதீவு சுற்றுலாத் திட்டத்தில் பாரிய ஊழல்...! மூன்று உயரதிகாரிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு
மண்டைதீவு சுற்றுலாத் தள அமைப்பின் போது, அரச நிதியும் சொத்துக்களும் மூன்று உயரதிகாரிகளால் சூறையாடப்பட்டு, அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (21-01-2026) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மண்டைதீவு சுற்றுலாத் தள அமைப்பில் அரச நிதியும் சொத்துக்களும் உயரதிகாரிகள் மூவரால் சூறையாடப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை உறுப்பினரும், தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட குழு
பிரதேச சபையால் இதற்கென விசேட குழு அமைத்து விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இழக்கப்பட்ட நிதியை மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் இந்த அமர்வின் போது, குறித்த சூழல்சார் சுற்றுலா (Eco-Tourism) திட்டம் தொடர்பாகப் பல்வேறு பிரச்சினைகள் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வேலணை பிரதேச இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பைக் கருத்திற்கொண்டும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், அத்திட்டத்திற்கான பொறிமுறை முறையானதாகக் கட்டமைக்கப்படவில்லை.
முறையான விசாரணைகள்
வேலணை பிரதேச செயலகம் தனது திட்ட வரைபாகக் கொண்டு வந்த குறித்த திட்டத்தை, அன்றைய மாவட்ட அரசாங்க அதிபர் எமது பிரதேச சபையிடம் வலியுறுத்தியே கையளித்திருந்தார்.
ஆனாலும், அத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் 2018ஆம் ஆண்டே எமது சபை வெளிக்கொணர்ந்தது.

அதுமட்டுமன்றி, அன்றைய துறைசார் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதை அடுத்து, அவரால் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
எனவே, இவ்விடயம் தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுத் தீர்வு எட்டப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |