அர்ச்சுனா எம்.பியுடன் இணைந்து பயணிக்க வாய்ப்பு: விஸ்வலிங்கம் மணிவண்ணன் பகிரங்கம்
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இருந்து சுயேட்சையாக களமிறங்கி நாடாளுமன்றத்திற்கு தெரிவானவருடன் இணைந்து பணிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “யாழ் மாவட்டத்தில் இருந்து சுயேட்சையாக களமிறங்கி நாடாளுமன்றத்திற்கு தெரிவானவருடன் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என ஒரு நேர்காணலில் என்னிடம் கேட்டிருந்தார்கள்.
முற்றுமுழுதாக அவ்வாறான வாய்ப்பில்லை என நான் சொல்லவில்லை. அவர் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும். தமிழ் தேசிய பாதையில் தன்னை வழிநடத்திக்கொள்ள வேண்டும். அவருடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்வாராக இருந்தால் எங்களுடைய கட்சியினுடைய மத்திய குழு தீர்மானமெடுக்கின்ற சந்தர்ப்பத்திலே சேர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்புக்களை முற்றாக புறக்கணிக்க முடியாது அல்லது இல்லை என்று கதவை மூட முடியாது.
இப்பொழுது நீங்கள் கருணாவோடு (Karuna Amman) அல்லது ஈபிடியியோடு (EPDP)சேர்ந்து தேர்தலில் பயணிப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதா எனக் கேட்டால் நான் உடனடியாக இல்லை என்று சொல்வேன்.
ஆனால் அந்தளவு தூரம் இவருக்கு சொல்ல முடியாது. அவர் வெளிப்படையாக தமிழ் தேசியத்திற்கு விரோதமாக செயற்படவில்லை. ஆனால் அவருடைய செயற்பாடுகளில் பல முரண்பாடான விடயங்களாக இருக்கின்றது.
அவர் தமிழ் தேசியப்பாதையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான நிபந்தனைகளுக்கு தன்னை மாற்றிக்கொள்வாராக இருந்தால் அவருடைய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்வாராக இருந்தால் எங்களுடைய மத்திய குழுவும் அதற்கு இணங்குமாக இருந்தால் சேர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்புக்களை அறவே இல்லை என்று சொல்ல முடியாது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |