இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்ற கைகோர்க்கும் பிரித்தானியா
பிரித்தானிய சந்தைக்கு இலங்கை பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிகபட்ச ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் கொள்வனவு பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இன்று (20) நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக வாய்ப்புகள்
அத்தோடு, ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் பொருளாதார ஸ்திரப்படுத்தல் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டியே ஆக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் காணும் நோக்கில் அடுத்த வருட ஆரம்பத்தில் வர்த்தகர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி
இலங்கையில் கரிம விவசாயத்தை ஏற்றுமதி செய்வதற்கான சந்தையில் அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், ஆடைகள், விவசாயப் பொருட்கள், இயற்கை அழகு சாதனப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களுக்கு நாட்டின் சந்தையில் இடமிருப்பதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பிரித்தானிய பிரஜைகள் முன்னணி இடத்தைப் பெற்றிருப்பதால், அதிக அளவு அந்நிய செலாவணி நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |