13 தீர்வல்ல! ரணிலுக்கு கனேடிய இராஜதந்திரி ஊடாக செய்தி
அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துமாறு அதிபர் விக்ரமசிங்கவிடம் கனடா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளடங்கிய சர்வதேச சமூகம் ஒரே குரலில் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என தமிழ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கனடா இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வெல்ஷ், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடிய தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது 13 ஆவது திருத்தச் சட்டம் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல என்றும் ஆனால், புதிய சட்டங்களை உருவாக்க முன், அரசமைப்பு சட்டத்தில் இருக்கும் 13ஆம் திருத்தச் சட்டத்தையும் 16ஆம் திருத்த மொழியுரிமை சட்டதையும் அதிபர் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் கட்சி தலைவர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் பன்மைத்தன்மையை கொண்டாடுவது, அதிகார பகிர்வு, 13ஆம் திருத்தம், மொழியுரிமை மற்றும் சமத்துவம், ஆகியவை பற்றி கனேடிய தரப்புடன் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு என ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும், இத்தகையை கொள்கையை முன்னெடுக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும் தாம் எதிர்த்து போராடுவோம் எனவும் அவர் கூறினார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்