பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை : வரவு செலவுத் திட்டத்தில் பாரிய ஊழல்களாம்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட கடன்களை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க ஆரம்பித்திருந்ததாக் கூறும் அவர், அப்போதைய சிறிலங்கா அரசாங்கமும் 2019 ஆம் ஆண்டில் குறித்த கடன்களை மீளச் செலுத்த தவறிய ஆட்சியாளர்களும் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு பொறுப்பு கூற வேண்டுமென இன்று(16) செய்தியாளர்கள் மத்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொய்த்துப்போன ரணிலின் நம்பிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பிரதமராகக் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தற்போதைய அதிபர் விசேட கருத்தொன்றை முன்வைத்திருந்தார். 2020 ஆம் ஆண்டில் இலங்கை கடனற்ற நாடாக மாறுமென அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
எனினும், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவர் 12.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக் கொண்டிருந்தார்.
இதனை 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 2020 ஆம் ஆண்டில் கடனை செலுத்த முடியாத நாடாக இலங்கை மாறியது.
இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
பாரிய ஊழல்கள்
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என்னை மேலும் கவலையடைய செய்கிறது.
வரவை விட அதிகமான செலவுகளை கொண்ட வரவு செலவு திட்டங்கள் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை எம்மால் சுட்டிக்காட்ட முடியும்.
இலங்கையின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் தற்போது நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இதற்கு உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்” - என்றார்.