மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : ஏற்பாடு செய்தவர் 'பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்' கைது
மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
மட்டக்களப்பு வெல்லாவெளியில் ஜனநாயக் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு காவல்துறையினரால் இடைநிறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு சென்ற வெல்லாவெளி காவல் நிலையப் பொறுப்பதிகாரி கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸிடம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவினை வழங்கி நிகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
இதனையடுத்து ஜனாநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸை வாக்குமூலம் பெறுவதற்காக வெல்லாவெளி காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இவரின் இந்தக் கைதானது முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும்
செயற்பாடு என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர்
துளசி தெரிவித்துள்ளார்.