மாவீரர் நாளுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்!(படங்கள்)
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்ரிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை இராணுவத்தின் 14 வது SLNG படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
கோரிக்கை
மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து துயிலும் இல்லத்திற்கு வருவதற்க்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்தோடு மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்கான உரிய இடவசதி இல்லாது தாம் துன்பப்படுவதாகவும் குறித்த காணியை இராணுவத்திடம் இருந்து விடுவித்து உதவுமாறும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்