மாவீரர் நினைவு தினத்தை குழப்ப முயலும் விஷமிகள்: உடைத்தெறியப்பட்ட தூபி (படங்கள்)
தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாள் இந்த வார தொடக்கத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள நிலையில் சில விஷமிகளாலும் காவல்துறையினராலும் தொடர்ந்தும் தடைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
அந்தவகையில் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி இன்று(23) வாழைச்சேனை காவல்துறையினரால் தகர்த்தெறியப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காவல்துறையினரால் சட்டத்துக்கு முரணாக தூபி அமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கட்டளையை பெற்று குறித்த தூபி தகர்த்தெறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொடிகள் அறுத்தெறியபட்டநிலை
அதேவேளை,கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் அறுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களால் நேற்று(22) இரவு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கொடிகாமம் காவல் நிலையத்தில் சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளரான-ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த செ.மயூரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முன்னாள் உப தவிசாளர் மயூரன் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு 8 மணி வரை நினைவேந்தல் இடத்தில் சிரமதானம் மேற்கொண்டு கொடிகளை கட்டி விட்டு சென்றிருந்த நிலையில் மேற்படி கொடிகள் அனைத்தும் இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை எனவும் எனவே இது தொடர்பாக காவல்துறையினர் தகுந்த விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |