ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற இளம் தாய்!
பேராதனை போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே சூழில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ள நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது.
குருநாகல் அட்டமுன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் வைத்தியர் சம்பத் ஞானரத்ன தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை மூலம் இடம்பெற்ற இந்த பிரசவத்தில், ஒரு பெண் குழந்தையும், மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன.
ஆசிரியையான அவருக்கு இது முதல் பிரசவம் என வைத்தியர் தெரிவித்ததுடன், பிறந்த குழந்தைகள் தற்போது நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தாயின் கருவில் 32 வாரங்கள்
சாதாரண பிரசவத்தில் சிசு, 40 வாரங்கள் தாயின் கருவில் முழுமைப்பெற்றதன் பின்னர் பிறக்கும். எனினும், குறித்த குழந்தைகள் 32 வாரங்கள் தாயின் கருவில் இருந்துள்ளன.
அத்துடன், ஒரே சமயத்தில் கருவில் 4 சிசுக்கள் இருந்தமையினால், அது தாய்க்கு பாதிப்பினை ஏற்படுத்துவதுடன், பிரசவம் மற்றும் கருத்தரிப்பு முறைமைகளுக்கு அமைய அவருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை கருத்திற்கொண்டு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைகளை பிரசவிக்க செய்ததாக வைத்திய நிபுணர் வைத்தியர் சம்பத் ஞானரத்ன தெரிவித்துள்ளார்.
