மருந்து பொருள்களுக்குக்கூட தட்டுப்பாடு- ஹர்ஷ டி சில்வா காட்டம்!
நாட்டில் உயிர்களைக் காப்பற்றக்கூடிய மருந்து பொருள்களுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது நாட்டின் வங்குரோத்து நிலைமையையே காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூர் உற்பத்திகள் 2020, 2022 ஆம் ஆண்டுகளில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இலங்கையின் பொருளாதாரம் பாரதூரமான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் மின்சார தடையால் நாட்டின் ஏற்றுமதித் துறை பாரிய சரிவை சந்திக்கும், இதனால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். முன்னாள் நிதி அமைச்சர் அமரர் மங்கள சமரவீரவும் நானும் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் ஜி.எஸ்.டி வரிச்சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருந்தோம். எனினும் புதிய அரசாங்கம் அதனை குப்பையில் வீசியெறிந்தது.
வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை 73 வருடங்களாக நாம் செலுத்தி வருகிறோம். ஆனால் ராஜபக்சக்களின் தற்போதைய ஆட்சியில் வரிச்சலுகை வழங்கப்பட்டமை, பணம் பாரியளவில் அச்சிடப்பட்டமை போன்ற பிரதான இரு காரணங்களாலும் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
