கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரின் தடயவியல் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின
அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் பௌத்த பிக்குகளின் இரு தரப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகளின் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, மேற்கொள்ளப்பட்ட தடயவியல் மருத்துவப் பரிசோதனையில் குறித்த பிக்குகள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதித்துறை மருத்துவ அதிகாரி உத்தியோகபூர்வமாக காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் காவல்துறை பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
தலையில் பலத்த காயம்
கடந்த 12ஆம் திகதி, அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் பலாங்கொடை கஸ்ஸப தேரர் தலைமையிலான பிக்குகள் ருவன்வெலிசாயவிற்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, குறித்த இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான மற்றுமொரு குழுவினர் வருகை தந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.
இந்த மோதலின்போது தடிகளால் தாக்கப்பட்டதில் ராஜாங்கனை சத்தாரதன தேரரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |