சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் ! ட்ரம்பின் அறிவிப்பு - பைடனின் பதவிக்கு சவால்
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனின் எஞ்சியுள்ள பதவிக்கால நிகழ்ச்சி நிரலுக்கு சவாலை தோற்றுவிக்கும் முடிவுகளை வழங்கக்கூடும் என்ற எதிர்வு கூறல்களுடன் இடைக் காலத் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது.
2020 இல் ஜோ பைடன் டொனால்ட் ரம்பை தோற்கடித்த பின்னர் நடைபெறும் முதலாவது தேசிய தேர்தலாக இந்த இடைக்காலத் தேர்தல் மாறியுள்ளதால், அமெரிக்காவும் உலகமும் இந்தத் தேர்தல் களத்தை உற்றுநோக்கி வரும் நிலையில் இந்தத் தேர்தல் மீதான பார்வை அதிகரித்துள்ளது.
இறுதிக்கட்டப் பரப்புரை
சமகால அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற இறுதிக்கட்டப் பரப்புரைகளிலும் கடுமையான கருத்தியல் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில் இன்று வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
ஜோ பைடனை பொறுத்தவரை இன்றைய தேர்தல் மிக முக்கியமாக நோக்கப்படுகிறது. இன்றைய தேர்தல் முடிவுகள் மூலம் கொங்கிரஸின் இரண்டு அவைகளின் கட்டுப்பாட்டை பைடனின் ஜனநாயகக் கட்சி இழந்தால் அவருக்கு பாதகமாக மாறக்கூடும்.
இந்த நிலையில் கொங்ரசின் இரண்டு கட்டுப்பாட்டை இனி ஜனநாயகக் கட்சி வைத்திருப்பது கடினமானது என்பதை பைடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்றைய தேர்தல் 435 ஆசனங்களை கொண்ட கீழ் அவைக்கும் 100 இடங்களை கொண்ட செனட் சபையில் 35 இடங்களுக்கும் நடைபெறவுள்ளது.
அதேபோல 36 மாநிலங்களில் ஆளுநர் தெரிவுகளும் இதற்கும் அப்பால் மாநிலங்களின் சட்டமா அதிபர்கள் உட்பட்ட உயர் அதிகாரிகளின் தெரிவுகளுக்கும் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளன.
இன்றைய வாக்களிப்பு அமெரிக்காவின் இரண்டு பெரிய கட்சிகளான குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் நாட்டின் சட்டமன்ற அமைப்பான கொங்கிரஸை கட்டுப்படுத்தும் விடயத்தில் முக்கியமானது.
தேர்தல் முடிவுகள்
பைடனின் ஜனநாயகக் கட்சி தற்போது கொங்கிரசில் குடியரசுக் கட்சியினரை விட மிகக் குறுகிய பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆனால் இன்றைய தேர்தல் ஊடாக அந்த நிலைமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, சட்டமன்றத்தின் மேற்சபையான செனட் தற்போது இரண்டு கட்சிகளுக்கும் 50 - 50 எனப் பிளவுபட்டிருந்தாலும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் ஒரேயொரு வாக்கு இன்றுவரை ஜனநாயகக் கட்சியை காப்பாறிவரும் நிலையில், இன்றைய வாக்களிப்பில் குடியரசுக் கட்சி மேலதிக இடங்களை எடுத்தால் அந்த நிலைமையும் சவாலாக மாறக்கூடும்.
ஆனால் ஜனநாயகக் கட்சியும் நம்பிக்கையுடன் உள்ளது. எனினும் குடியரசுக் கட்சி கீழ்அவை அல்லது செனட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், பைடனின் எதிர்கால நிகழ்ச்சி நிரல் ஆபத்தில் இருக்கக்கூடும்.
ட்ரம்பின் அறிவிப்பு
இந்த நிலையில் இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் நேற்று ஒஹியோவில் நடந்த பேரணியில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான அறிவிப்பாவே இருக்கும் என நம்பபடுகிறது.
நவம்பர் 15, செவ்வாய்கிழமை, புளோரிடாவில் உள்ள தனது வதிவிடத்தில் தான் மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடப் போவதாக நேற்று ஓஹியோசிவ் இடம்பெற்ற பேரணியில் ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

