பொருளாதார நகர்வில் சிறுதோல்வி - ஏற்றுக்கொண்டது ஆளும் தரப்பு
இலங்கையை தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் சிறு தோல்வி ஏற்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸ்ஸநாயக்க (S. B. Dissanayake) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“சேதனப் பசளை முறை ஒரு பரீட்சாத்த முறையாகக் கொண்டு வரப்பட்ட நிலையில் அதில் சிறியளவில் தோல்லி ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இந்தியா, வெளிநாட்டு பால்மா இறக்குமதியினை நிறுத்தியமையினால் இன்று பால் உற்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் பால் தன்னிறைவை நோக்கிப் பயணிக்கிறது.
தேயிலை மற்றும் மரக்கறி உற்பத்திகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்குரிய மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.
இலங்கையை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாகக் கொண்டுவருவதே எமது ஆட்சியின் நோக்கமாகும். இலங்கையின் அரிசி உயரிய தரத்தினைக் கொண்டது” - என்றார்.
