இலங்கையில் இலட்சத்தைக் கடந்த குடும்பமொன்றின் மாதச்செலவு
இலங்கையில் குடும்பமொன்று ஒரு மாதத்திற்கு செலவு செய்யும் தொகை ஒரு இலட்சம் ரூபாவினை கடந்துள்ளதாக மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பணவீக்கம் காரணமாகவே மாதச் செலவு இவ்வாறு வெகுவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் மாதச்செலவு 16.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கை
இதேவேளை 2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் சராசரி மாதச்செலவு 103,283 ரூபாவாக காணப்பட்டதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் ஒரு மாதத்திற்கான நுகர்வுச்செலவு 88,704 ரூபா என தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் படி அறிவித்திருந்தது.
குறித்த தொகை 2023 ஆம் ஆண்டில் 14,579 ரூபாவினால் அதிகரித்து 103,283 ரூபாவாக ஆக உயர்வடைந்துள்ளது.
உணவு அல்லாத பொருட்களுக்கு
இந்த நிலையில் கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் உணவு அல்லாத பொருட்களுக்கு மக்கள் அதிகளவில் செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி 2023 ஆம் ஆண்டில் குடும்பம் ஒன்றின் உணவு அல்லாத செலவுகள் 56.2 வீதமாக காணப்பட்டுள்ளது.
எனவே உணவு அல்லாத பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு அவற்றுக்கான செலவுகளும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |