உக்ரைனின் அதிரடி தாக்குதல் : ரஷ்யாவில் மூடப்பட்டன முக்கிய விமான நிலையங்கள்
ரஷ்யா மீதான தொடர்ச்சியான உக்ரைனிய ட்ரோன் தாக்குதலால் மொஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும், குறைந்தது 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை முதல் 230க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - அவற்றில் 27 தலைநகரின் மீதும் அடங்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
130க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன
ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, தலைநகருக்கு சேவை செய்யும் நான்கு முக்கிய விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன, மேலும் 130க்கும் மேற்பட்ட விமானங்களும் திருப்பி விடப்பட்டன. பின்னர் அனைத்தும் மீண்டும் இயல்பான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், பிராந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, உக்ரைனில் ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
24 மணி நேரத்தில் 10 முறை மூடப்பட்ட விமான நிலையங்கள்
தாக்குதல்கள் காரணமாக மொஸ்கோ விமான நிலையங்கள் 24 மணி நேரத்தில் 10 முறை மூடப்பட்டதாக ரஷ்யாவின் சுற்றுலா ஒபரேட்டர்கள் சங்கம் (Ator) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
மொஸ்கோவின் தென்மேற்கில் உள்ள கலுகா பகுதியும் பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை காலை முதல் 45 ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது, இதன் விளைவாக கலுகா சர்வதேச விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது.
ரோஸ்டோவ் மற்றும் பிரையன்ஸ்க் உள்ளிட்ட உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளிலும், கருங்கடலுக்கு மேலேயும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவில் பயணத் தடையை ஏற்படுத்தியது இது முதல் முறை அல்ல. மே மாதத்தில், கீவ் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவிய பின்னர் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குறைந்தது 60,000 பயணிகள் சிக்கித் தவித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
