ஜனக்க ரத்னாயக்கவுக்கு எதிரான பிரேரணை சபையில் நிறைவேறியது..!
இரண்டாம் இணைப்பு
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து ஜனக்க ரத்நாயக்க நீக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் விவாதங்களை பார்வையிடுவதற்கு ஜனக்க ரத்நாயக்க அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை அரசியல் ரீதியான செயற்பாடு என ஜனக்க ரத்நாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தமக்கு ஆதரவாக நிற்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டிருந்த பின்னணியில், அவர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தில் தலையிடவும், அரசியல் செல்வாக்கு செலுத்தாத பொதுத்துறை ஊழியர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவும் அரசாங்கம் முயற்சிப்பதாக ஜனக்க ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை வாக்கெடுப்பும் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவினால் 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக ஜனக்க ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.
பிரேரணை மீதான விவாதம்
எனினும், கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியுடன் உருவாகிய மின்சார நெருக்கடிக்கான மாற்றுத்தீர்வுகளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைத்த போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
கடந்த வருடம் ஓகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் முன்வைத்த கட்டண அதிகரிப்பு சதவீதத்தை விட குறைந்த சதவீதத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியுமென ஜனக்க ரத்நாயக்க வலியுறுத்தினார்.
இதனால் அவருக்கு எதிரான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன்னை பதவி விலக்கமாட்டார்கள் என ஜனக ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்