காணிகளற்று கிடக்கும் முல்லைத்தீவு மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வனவளத் திணைக்களம் 84,664.33ஹெக்டயர், 35.06 சதவீதமான காணிகளை ஒதுக்கக்காடுகளாகக் அறிவித்துள்ளது.
இதனால் அங்கு 3,389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத நிலை காணப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் (16) நேற்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது ,
வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ள காணிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1985 இற்கு முன்னர் வனவளத் திணைக்களத்தால் 88,671.05 ஹெக்டயர், 36.72 சதவீதமான காணிகள் ஒதுக்கக்காடுகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வனவளத் திணைக்களத்தினால் 84,664.33ஹெக்டயர், 35.06 சதவீதமான காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒதுக்கக்காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு வனவளத் திணைக்களத்தினால் ஒதுக்கக்காடுகளாக அறிவிக்கப்பட்ட காணிகளில், 20,543.86 ஹெக்டயர், 8.51 சதவீதமான காணிகளை விடுவிக்குமாறு இதுவரையில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக 9,311.00 ஹெக்டயர், 3.86 சதவீதமான காணிகளை வனவளத்திணைக்களம் உடனடியாக விடுவிப்பதற்கு பரிந்துரைத்துள்ளது. அதேவேளை 11,232.86ஹெக்டயர், 4.65சதவீதமான காணிகள் வனவளத்திணைக்களத்தால் விடுவிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு தேசிய குழுவின் இறுதித் தீர்மானத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 11,798.75 ஹெக்டயர், 4.89 சதவீதமான காணிகள் வனவளத்திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய ஒதுக்கக்காடுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்கள்
இவ்வாறு வனவளத்திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான காணிகளைக் கையகப்படுத்தியுள்ள சூழலில், 3,389 குடும்பங்கள் குடியிருப்பதற்கு ஒரு துண்டுக்காணி கூட இல்லாமல் இருக்கிறார்கள்.
வாழ்வாதாரத்திற்கு
அதேவேளை 28,626 இளைஞர், யுவதிகள் தமது வாழ்வாதாரத்திற்காக ஒரு ஏக்கர் வீதம் காணிகளைத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேச்சல் தரவை தட்டுப்பாடு
அதுமாத்திரமின்றி 89ஆயிரத்திற்கு மேற்பட்ட மாடுகள் மேச்சல் தரவையில்லாமல் காணப்படுவதால், கால்நடை மூலமான பொருளாதாரமும் முடங்குகின்ற ஒரு சூழ்நிலையில் காணப்படுகின்றது.
முதலீட்டாளர்கள்
அத்தோடு நூற்றுக் கணக்கான முதலீட்டாளர்கள் மாவட்டசெயலகத்திடம் காணி கோரியிருந்த நிலையிலும், அவர்களுக்கு சாதகமாக எந்தப்பதிலும் கூறமுடியாத நிலை காணப்படுகின்றது.
இந் நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில், பகிர்ந்தளிப்பதற்கு காணி கையிருப்பு இல்லாத நிலையே காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த கலந்துரையாடலில் வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதுதொடர்பில் அதிக கவனஞ்செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இக் கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், குலசிங்கம் திலீபன், அதிபர் செயலக அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்டசெயலாளர் க.கனகேஸ்வரன், வனவளத் திணைக்கள அதிகாரிகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.