உலகில் மறுக்கப்பட்ட அநீதி... பெரும் இனவழிப்பு நினைவுநாள்…!
இன்றைய நாட்களில் இனவிடுதலைக்கான பயணத்தில் நாம் பெரும் தடைகளையும் இடையூறுகளையும் எதிர்கொண்டு வருகிறோம்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் அதிர்வும் தாக்கமும் அகலாத மண்ணில் அதன் பின்விளைவுகளை இன்றும் அனுபவித்து வருகிறோம், ஒரு இனப்படுகொலை அது நிகழ்கின்ற காலத்தில் மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
வரலாறு நெடுக பெருந்துயரத்தை அது விளைவித்து விடுகிறது. இனப்படுகொலைக்கான நீதிக்காக ஈழத் தமிழினம் காத்துக் கொண்டிருக்கும் காலத்தில் பன்னாட்டுச் சூழலில் நடந்த ஒரு மாபெரும் இனவழிப்பு குறித்து அறிதலும் நினைவுகொள்ளலும் அவசியமானது.
பெரும் இனவழிப்பு நினைவுநாள்
அரசியலின் தவறுகள் மோசமான வரலாறுகளை எழுதிவிடுகிறது ஆனால் வரலாற்றில் இருந்து தான் இன்னும் பாடங்களை உலகம் கற்காமல் இருக்கிறது. அப்படிக் கற்றிருந்தால் உலகில் மிகவும் கசப்பான அனுபவமாக கருதப்படுகின்ற இனப்படுகொலைகள் திரும்பத் திரும்ப நிகழ்ந்தபடி இருக்காது. இந்த நவீன உலகத்திலும் தொடர்பாடல் வளர்ச்சி பெற்ற யுகத்திலும் இனப்படுகொலை எல்லாம் நடக்கிறதா? என்று யாரேனும் கேட்கக்கூடும். நவீன ஊடகங்களின் ஆரம்ப யுகத்தில்தான் இந்த நூற்றாண்டின் ஈழ மண்ணில் மாபெரும் இனப்படுகொலை ஒன்று தெளிவாகத் தெரியும்படியாகவே நிகழ்த்தப்பட்டது.
ஜனவரி 27ஆம் திகதி பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள். இப்பெரும் இன அழிப்பினால் நாட்சிப் படைகளினாலும் அதன் கூட்டாளிகளினாலும் 6 மில்லியன் யூதர்கள், 2 மில்லியன் நாடோடி இன மக்கள் (உரோமா மற்றும் சின்டி), 15,000 மாற்றுப் பாலுறவுக்காரர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏனையவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாகவே இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த 2005ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த பொதுசபைக் கூட்டத்தில் இந்த நாளை நினைவுகூரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஈழத்தில் இனவழிப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 60/7ஆம் இலக்கத் தீர்மானமானது, நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் விடுதலை மற்றும் பெரும் இன அழிப்பு நிறுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக 24 சனவரி 2005 அன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைகளின் சிறப்பு அமர்வின்போது நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போர் அனுபவங்களின் அடிப்படையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம் அமைந்தது. ஐக்கிய நாடுகள் சபையில் மேற்குறித்த தீர்மானம் 2005இல் இயற்றப்பட்ட நிலையில் அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஈழத்தில் மிகப் பெரும் இனவழிப்பு துவங்கப்பட்டது.
ஈழத்தில் இன ஒடுக்குமுறைக்கும் மேலாதிக்கத்திற்கும் எதிராக ஈழத் தமிழ் மக்கள் போராடத் துவங்கினர். ஆரம்பத்தில் ஜனநாயக வழியில் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்தனர். பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் இரண்டாக இருந்த இலங்கைத் தீவில் ஒன்றுபட்ட இலங்கைக்காக பிரித்தானியர்களுக்கு எதிராக போராடிய தமிழ் மக்களுக்கு சுதந்திர இலங்கை அடிமை சாசனத்தையும் அடிமை வரலாற்றையும் பரிசளித்தது. 1956 இல் உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள சட்டமும் அத்துடன் துவங்கப்பட்ட இனப்படுகொலைகளும் ஈழத் தமிழர்களுக்கு தனித் தேசம் ஒன்றே பாதுகாப்பான வழியென பிரிந்து செல்லும் பாதையை வலியுறுத்துகிறது என்பதை தமிழ் தலைவர்களைக் காட்டிலும் சிங்களத் தலைவர்களே எடுத்துரைத்தனர்.
ஒடுக்கப்பட்ட தேசம்
இந்த விதத்தில் சிங்கள முற்போக்குத் தலைவர்கள் தீர்க்க தரிசனமாக எடுத்துரைத்தனர். பின் வந்த காலத்தில் ஈழத் தமிழ் இளைஞர்கள் தனி நாடு கோரி ஆயுதம் தரித்த போராட்டத்தை துவங்கினர். சிங்களப் பேரிவாதத்திடம் இருந்தும் சிங்களப் பேரினவாதம் உருவாக்கிய அரசியலமைப்பு மற்றும் அதன் வழி இயங்கிய அரச எந்திரமான இராணுவம் மற்றும் காவல்துறையின் ஒடுக்கமுறைக்கு எதிராக தமிழர்கள் ஆயுதம் திரப்பதுவே ஒரே வழியென தமிழ் இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
சிங்கள தேசத்திற்கு நிகராக தமிழ் தேசத்தை கட்டி எழுப்பி பொருளாதாரம், கல்வி, நிர்வாகம், மருத்துவம், நிதி என அனைத்துத் துறைகளிலும் இலங்கையில் முன்னுதாரணமான தேசம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேர்த்தியுடன் படைத்தார். அந்த வகையில் இன ஒடுக்குமுறைக்கும் இன மேலாதிக்கத்திற்கும் எதிராக 2009 இற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தமிழீழத் தேசம், சிங்கள தேசத்திற்கும் இந்த உலகில் உள்ள நாடுகளுக்கும் முன்னூதாரணமானதாக அமைந்தது.
ஈழத்தில் நாசிசம்
எந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, எந்த இனவழிப்புக்கு எதிராக தமிழர்கள் போராடினார்களோ, அதே இனவழிப்பை, இன ஒடுக்குமுறையை ஆயதமாக கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழீழ தேசம் மீதும் அங்கு வாழ்ந்த தமிழர்கள்மீதும் இனவழிப்புப் போரை சிங்கள அரசு நடாத்தியது. இதனால் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இறுதிப் போர் காலத்தை அண்டிய போரில் மாத்திரம் இல்லாமல் செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் மண் தமிழ் இனத்தின் குருதியால் நனைந்து ஊறியது.
பாதுகாப்பு வலயங்களை அறிவித்து அங்கு தஞ்சம் புகுந்த மக்கள்மீது தாக்குதல் நடாத்தியமை, உணவு, மருந்து முதலியவற்றை தடை செய்து மக்களை கொன்றமை, சுவாசிக்கும் காற்றில் விசம் கலந்து குழந்தைகளையும் அப்பாவிகளையும் கொன்றமை என உலகில் பெரும் இன அழிப்பில் நாசிப்படைகளும் அதன் கூட்டுப் படைகளும் செய்த அத்தனை இனவழிப்பு முறைகளையும் இலங்கை அரசும் பயன்படுத்தியது. இனப்படுகொலை (Genocide) ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பதே இனவழிப்பு என்ற வரைவிலக்கணத்திற்கு அச்சுப் பிசகாமல் நிகழ்த்தப்பட்டது ஈழ இனப்படுகொலை.
ஐ.நாவின் மௌனம்
1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை இதை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2 இன்படி அறிவித்தது. இக்கொடுஞ்செயல் புரிவோரைத் தண்டிக்க சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் 2002 இல் கொண்டுவரப்பட்டது. இந்நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை அளிக்க உடன்படிக்கையின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஈழ இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதுடன் உலகில் இன்னமும் இன அழிப்புக்கான கதவுகள் திறந்தே விடப்படுகின்றன.
நவீன யுகத்தில் கத்தியின்றி இரத்தமின்றி இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தில் முன்னாள் போராளிகள்மீதான முள்ளிவாய்க்கால் இனப்போர் இன்னும் முடியவில்லை. ஈழத்தில் மக்கள் உணர முடியாத வகையில் இல்லாமல் செய்யப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காய் அவர்களின் உறவுகள் தேடித் தேடியே தம்மை அழித்துக் கொண்டிருக்கின்றனர். 2009 இனப்படுகொலைக்கு நீதியை வழங்காமையும் அது தொடர்பில் மௌனம் சாதிக்கின்றமையும் அதற்காக சர்வதேச சமூகம் வெளிப்படுத்தும் கண்டுகொள்ளாமையும் ஈழத்தில் இன்னுமின்னும் இனவழிப்பை ஊக்குவிக்கிறது. இப்படி இருக்கையில் ஜனவரி 27 பன்னாட்டு இன அழிப்பு நினைவுநாள் அதன் அர்த்தத்தை இழந்து உலகமெங்கும் இனவழிப்புக் கதவுகளையே திறக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 27 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.