நாடகத்தின் வழி தேசத்திற்குப் பணியாற்றிய குழந்தை மா. சண்முகலிங்கம்
“எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை இலக்கியப் படைப்புக்கள் தரிசித்துநிற்க வேண்டும். எமது சமூக வாழ்வியக்கத்தின் சகல பரிமாணங்களிலும் ஆழமாக ஊடுருவி நிற்கும் இன ஒடுக்குமுறையின் கொடுரத்தினை சிருஷ்டிகர்த்தாக்கள் சித்தரித்துக் காட்டவேண்டும்…” என்ற விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப ஈழ மண்ணில் தமது கலை ஆளுமைகளால் பல கலைஞர்கள் விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழர் தேசத்திற்கும் தமது மகத்துவப் பணியினை ஆற்றியிருந்தனர்.
அந்த வகையில் மண்சுமந்த மேனியர் என்ற நாடகத்தின் மூலம் எண்பதுகளில் விடுதலைப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் நாடகத்தை எழுதி நெறிப்படுத்திய குழந்தை மா. சண்முகலிங்கம் கடந்த 17ஆம் நாளன்று காலமாகினார்.
யார் இந்த ஆளுமை?
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் 1931 நவம்பர் 15 இல் பிறந்த சண்முகலிங்கம் நீர்கொழும்பு பகுதியில் உள்ள போலவத்தையில் சிங்களவர்களிடையே தனது பத்து வயது வரை வளர்ந்தார். இவரது தந்தை பணியாற்றியமை காரணமாக அங்கு வாழ்ந்த நிலையில், சிங்கள மக்களுடனான தொடர்பினால் அவர் சிங்கள மொழியையும் கற்றுக்கொண்டார்,
போலவத்தையில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பள்ளியில் படித்தபோது ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். பத்து வயதிற்குப் பிறகு இவர் யாழ்ப்பாணம் சென்றார். 1953 முதல் 1957 வரையான காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல், வரலாறு, அரசியல் கற்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து யாழ்ப்பாணம் திரும்பி, செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் பின்னர் 1972 இல் கிளிநொச்சியில் பளை மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஈழத்தின் நாடக எழுத்தாளராக, நாடகப் பயிற்சியாளராக நாடக நடிகராக அறியப்பட்ட குழந்தை ம. சண்முகலிங்கம் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதுவரையில் நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியிருக்கிறார். இவைகளில் பல நாடக நூல்களாகவும் வெளிவந்துள்ளன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன் - செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்துமுள்ளார்.
மண்சுமந்த மேனியர்
யாழ்ப்பாணத்தில் 1970களின் பிற்பகுதியில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தமையின் வாயிலாக யாழ்ப்பாணத்திலும் ஒட்டுமொத்த ஈழ நிலத்திலும் ஒரு நாடகப் பாரம்பரியத்தை உருவாக்குவதில் இவரின் பங்களிப்பு முக்கியமானது.
விடுதலைப் போராட்டக் காலத்தில் இவரது அரங்கச் செயற்பாடுகள் விடுதலை எழுச்சிக்கு துணை நின்றன. 1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் இராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
தனக்குப் பின்னால் பல நாடக ஆளுமைகளை, நாடகச் செயற்பாட்டாளர்களை, நாடக இயக்குனர்களை இவர் உருவாக்கினார். எண்பதுகளில் விடுதலை இயக்கங்கள் எழுச்சிபெற்ற காலத்தில் இவர் எழுதி இயக்கிய ‘மண் சுமந்த மேனியர்” என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான ‘அன்னை இட்ட தீ” ‘எந்தையும் தாயும்” ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை.
1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். “நாடகம் போடலாமென்ற முன்னெடுப்பில் இறங்கிய சிதம்பரநாதனும், அ. ரவியும். 'மண் சுமந்த மேனியர்' உருவாக்கத்திற்காக குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டரை அணுகினர். இவர்களுடன் பின்னர் இணைந்து கொண்ட கவிஞர் சேரன் தனது உணர்வெழுச்சிக் கவிதைகளால் 'எங்கள் மண்ணும் இந்த நாட்களும்' என்ற ஒரு கவிதா நிகழ்வை தயாரிக்கிறார். இதில் குறிப்பாக 'மண்;சுமந்த மேனியர்' என்ற படைப்பு மூன்று பேராளுமைகளின் சங்கமம் என்பேன்..” என்று ஈழத்தின் நாடகப் பேராசிரியர் சிதம்பரநாதன் பதிவு செய்துள்ளார்.
ஈழத்தை அரங்கேற்றிய கலைஞர்
போரினால் ஏற்படும் அகக் காயங்கள், பெண்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கங்கள், சிங்கள பேரினவாத ஆதிக்கத்தால் ஏற்பட்ட தமிழ் சமூகத்தின் கூட்டு மனநிலை, இனப்படுகொலைகளின் தாக்கங்களால் குடும்பங்களின் சிதைவு, அடக்குமுறைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் என்று தமிழ் மக்கள் ஒடுக்குமுறையின் அவலங்களை எதிர்கொண்ட முக்கிய காலத்தில் நிகழ்ந்த வாழ்வையும் போராட்டத்தையும் இவரது நாடகங்களில் காணலாம்.
அது மாத்திரமின்றி உலகப் பொதுவான வாழ்வில் அனைத்துத் தேசங்களுக்கும் பொருத்திப் பார்க்கும் வகையிலுமாக மனிதர்கள் இயல்புகளையும் வாழ்வின் போக்குகளையும் தனது நாடகத்தில் சித்திரித்துள்ளார். ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியா என்பதிலும்கூட இவரது பங்களிப்பு முதன்மையானது. இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார்.
நாடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கியிருந்தது. ஈழத்துத் தமிழ் நவீன அரங்க வரலாற்றில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் நாடகத்துறையினுள் நுழைந்த 1950களிலிருந்து போர் முடிவுக்கு வந்த காலத்தின் பின்னரும் நாடகப் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களின் கலை இலக்கியப் பணிகளின் வாயிலாக என்றும் நினைவில் கொள்ளப்படுவார்கள். அந்த வகையில் ஈழ நிலத்தின் நாடக வரலாற்றில் மிகச் சிறந்த பேராளுமையாக நாடகத்தின் பிதாமகராக குழந்தை மா. சண்முகலிங்கள் நிலைத்திருப்பார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.