ஒரு தமிழ் ஊடகவியலாளரைப் படுகொலை செய்த அதே கரங்கள்தான் சிங்கள ஊடகவியலாளரையும் கொன்றதுவா !
இனப்படுகொலையின் நாட்காட்டியில் இன்று ஒரு சிங்கள ஊடகவியலாளரும் தமிழ் ஊடகவியலாளரும் கொல்லப்பட்டதாக காட்டுகிறது.
இதில் ஒரு நிதர்சனமான உண்மையும் புலப்பட்டு நிற்கிறது. தமிழ் ஊடகவியலாளரைக் கொன்ற அதே கரங்கள்தான் சிங்கள ஊடகவியலாளரையும் கொன்றதுவா என்கிற நீதிக்கும் அறத்துக்குமான ஒரு பெருங் கேள்வி எழுகிறது.
அப்பாவி ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்கின்ற சிங்களப் பேரினவாதம் ஒரு நாள் சிங்கள மக்களுக்கு எதிராகவும் திரும்பும் என்று கூறிய தலைவர் பிரபாகரனின் தீர்க்க தரிசனத்தை இந்த ஊடகப் படுகொலைகளும் எங்களுக்கு உணர்த்துகின்றன.
தலைவரின் இந்த தீர்க்கதரிசனம் பலவகையில் இலங்கைத் தீவில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அதனொரு வெளிப்பாடாக சாட்சியாக இன்றைய நாள்.
ஈழவன் எனும் சுகிர்தராஜன்
ஈழத்தில் போர்க்காலத்தில் ஊடகப் பணியாற்றியவர் எஸ்எஸ் என அறியப்பட்ட சுகிர்தராஜன். டிசம்பர் 12, 1969 இல் பிறந்த சுகிர்தராஜன் ஈழத்தின் தலைநகர் திருகோணமலையைச் சேர்ந்தவர்.
சுடர் ஒளி என்ற பத்திரிகையில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர் திருகோணமலை மாவட்டம் குறித்த செய்திகளை வேறு பல ஊடகங்களிலும் வெளிப்படுத்தி வந்தார்.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்தில் வெளிவந்த உதயன் பத்திரிகையிலும் செய்திகளை இவர் எழுதியிருக்கின்றார். அதைத் தவிர வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார்.
வீரகேசரியில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்றா நியூசில் ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.
மட்டக்களப்பு குருமண்வெளியில் பிறந்த சுகிர்தராஜனின் தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு குருமண்வெளி சிவசக்தி வித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கற்றுள்ளார்.
பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர் 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையில் எழுத்தளராகப் பணியில் சேர்ந்தார்.
மாவட்டத்தின் நடப்புக்களையும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைத் தேவைகள் சார்ந்த விடயங்களையும் செய்திகளாக எழுதி வந்த இவர், தன் எழுத்துக்களில் அரசியல் சார்ந்த குரலாகவும் வெளிப்பட்டு நின்றார்.
ஐந்து மாணவர் படுகொலையின் சாட்சி
இதுவே இவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர் படுகொலை செய்யப்பட்ட ஆண்டு 2006. ஈழத்தின் கிழக்கில் இனப்படுகொலைப் போர் சூழ்ந்த வருடம் அது.
2006ஆம் ஆண்டு சனவரி 02 ஆம் நாளன்று திருகோணமலையை மாத்திரமின்றி ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் அசைத்தது திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை.
சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் திருகோணமலையில் இருந்து ஐந்து மாணவர் படுகொலை குறித்த செய்திகளை சுகிர்தராஜன் வெளிக்கொணர்ந்தார்.
இதற்குச் சில நாட்களின் பின்னர் அதாவது 2006 ஜனவரி 24 இல் சுகிர்தராஜன் திருகோணமலையில் ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பிலான ஆதாரங்களை இவர் வெளியிட்டமையால்தான் படுகொலை செய்யப்பட்டார் என்று அப்போதே சந்தேகிக்கப்பட்டது. மிக முக்கியமாக ஐந்து மாணவர் படுகொலை குறித்த நிழல்படங்களை இவரே பதிவு செய்தார்.
கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் அரசுடன் இணைந்திருந்த ஆயுதக்குழு திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை இவர் சுடரொளியில் வெளியிட்டிருந்தார். இதனாலும் இவர் படுகொலை செய்யப்பட்டார்.
திருமணமான சுகிர்தராஜனுக்கு இரு பிள்ளைகள். இலங்கையில் அழிக்கப்பட்டு நீதிகிடைக்காத ஊடகவியலாளர்களின் பட்டியலில் இவர் சேர்க்கப்பட்ட நாள் ஜனவரி 24.
தமிழருக்காக குரல் கொடுத்த சிங்களக் குரல்
ஈழத் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் சந்தித்த பேரினவாத ஒடுக்குமுறைகளைக் கண்டு கொதித்துக் குரல் கொடுத்த சிங்கள ஊடகவியலாளர்கள், சிங்களப் புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.
அதனால் பலர் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், பிரகீத் போன்றவர்கள், ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமையால் அழிக்கப்பட்டுமுள்ளனர். அடிப்படையில் கேலிச்சித்திர ஓவியரான பிரகீத் எக்னலிகொட சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்தவர். பிரபல சிங்கள ஊடகமான லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தில் பிரகீத் பணியாற்றியுள்ளார்.
இவர் இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது மகிந்த ராஜபக்ச இரண்டாவதுமுறை அதிபர் பதவியை வெல்வதற்கு முன்னர், 2010, ஜனவரி 24 ஆம் நாள் இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தையில் வைத்துக் காணாமல் போனதாக முறையிடப்பட்டது.
இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி "போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்” என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும் ஒருவர்.
எக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
பிரகீத் கடத்தப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தொடர்ந்து அவருக்காக்க் காத்திருக்கின்றனர். அவர்கள் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.
பிரகீத் அரசின் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களால் காணாமல் ஆக்கப்பட்டார் என்றும் அவர்களுக்கே பிரகீத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த காலத்தில் ராஜபக்ச அரசுக்கு எதிராக ஆட்சியைக் கைப்பற்ற விளைந்தவர்களும் இன்றைய அரச தரப்பினரும் பிரகீத்திற்கு நீதியைப் பெற்றுத் தருவோம் என்று மக்கள் முன்னிலையில் கூறினர்.
இனங்களுக்கும் திசைகளுக்கும் ஏற்ற இறக்கங்களும் பாரபட்சங்களும் உள்ளன. ஆனால் சுகிர்தராஜனும் பிரகீத்தும் படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் நீதி கிடைப்பதில் மாத்திரம் பாரபட்சம் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 24 January, 2025 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.