தமிழர் பூர்வீகத்தை கபளீகரம் செய்யும் மற்றுமொரு திட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம்!
முல்லைத்தீவில் கொக்குளாய் கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 06 கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறான நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
டக்ளஸ் ஆட்சேபனை
கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டம் இடைநிறுத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அதேவேளை அதற்கான பணிப்புரையையும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி சுமார் 70வீதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழுகின்ற குறித்த கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு எவ்விதமான அவசியமும் இல்லை என்பதை அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.
ரணிலின் உறுதி
அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும் எனவும் எடுத்துரைத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த முயற்சிகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அது தொடர்பான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உடனடியாக வழங்கியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
