பல்கலை மாணவர்களின் பேரெழுச்சியுடன் வழங்கி வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
காலை எட்டுமணியளவில் கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து பேரெழுச்சியாக மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று மட்டகளப்பின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பிற்கான அரிசி இரு பல்கலைக்ககழங்களினதும் மாணவ மாணவியரால் திரட்டப்பட்டது.
கஞ்சியின் வரலாறு
முதலாவதாக வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் காலை எட்டு மணியளவிலும் ,மட்டகளப்பு செங்கலடி பகுதியில் காலை 11:30 மணியளவிலும் ,மட்டகளப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் வளாகத்தின் முன்பாக குறித்த வளாக மாணவர்களுடன் இணைந்து மதியம் 1:00 மணியளவிலும் மட்டகளப்பு ஆரையம்பதி பகுதியில் மாலை 4 மணியளவிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கஞ்சியின் வரலாறு அடங்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
இதன் போது இருபல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுடனும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ,சிவில் அமைப்புக்கள்,இளைஞர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




