தமிழர் இனப்படுகொலையை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி(படங்கள்)
இரண்டாம் இணைப்பு
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வடகிழக்கு தழுவியரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தின் ஆரம்பநாளான இன்று தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
யாழ் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக கல்லூரியின் மாணவர்களினை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான வரலாறும் மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
முதலாம் இணைப்பு
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வடகிழக்கு தழுவியரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தின் ஆரம்பநாளான இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வீட்டிற்கு செல்லும் பிரதான சந்தியில் இன்று காலை 8:30 மணியளவில் ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து மே 15ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்திருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இதனை தெரிவித்தனர்.
அதன் ஆரம்பகட்ட நிகழ்வாக இன்றைய தினம் வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை எமது உறவுகளுடன் பரிமாறி எமது இனம் இனவழிப்புக்கு உள்ளான வரலாற்றினையும் வலிகளையும் எமது இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுப்பதே இதன் நோக்கமாக கருதப்படுகிறது.
இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பிற்கான அரிசி குறித்த பகுதியில் அமைந்துள்ள இல்லங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பல்கலைக்கழக மாணவர்களினால் சேகரிக்கப்பட்டு கஞ்சி தயாரிக்கப்பட்டு ,இனப்படுகொலைக்குள்ளாகி உயிர்நீத்த உறவுகளிற்காக சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை புலப்படுத்த அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லுமுகமாக தயாரிக்கப்பட்ட துண்டுபிரசுமும் வழங்கப்பட்டது.
இதன் பொழுது அதிகளவான பொதுமக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














