ஒற்றுமையே ஈழத்தமிழர்களின் பலமாகும் - நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் வலியுறுத்து
தமிழர் வரலாற்றில் முக்கிய கூட்டு நினைவாக அமையும், மே 18 துயர் தினத்தை நினைவு கூர்வதும், அஞ்சலி செலுத்துவதும் ஈழத்தமிழர்களின் கட்டாயக் கடமையாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
14 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பல்லாயிரக்கணக்கான மக்களை, மாவீரர்களை, தமிழர் தேசங்களை இழந்த துயர்தோய்ந்த நாள். ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் சிங்களம் புரிந்த இனப் படுகொலையின் இரத்த சாட்சியம் இந்த முள்ளிவாய்க்கால்.
தமிழீழ தேசத்தின் விடுதலை
நமது மக்கள் வாழ்வே போராகவும், போரே வாழ்வாகவும் வாழ்பவர்கள். எந்த ஒரு நெருக்கடியிலும் எமது விடுதலை வேட்கை குறையாமல் தமிழீழ மண் மீட்பில் தொடர்ந்து பயணித்தவர்கள். இன அழிப்பின் பின்னரும் எமது இறைமையை மீட்பதற்கு உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஆகுதியானவர்களையும், மக்களையும் மனதில் நிறுத்தி உறுதிபூணும் நாளிது.
எனவே முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் தம்முயிர் ஈந்தவர்களின் நினைவுடன், தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓயாது உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்” - என்றுள்ளது.
இவர் வெளியிட்ட அறிக்கையில் முழுமையான விபரம் இணைக்கப்பட்டுள்ளது



