தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரித்தானிய நாடாளுமன்றில் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழர் இன அழிப்பு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்துள்ள Westminster அரண்மனையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG- T) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிடுதல், காணொளி காட்சிப்படுத்தல் மற்றும் கண்காட்சி என்பன இடம்பெற்றன.
அஞ்சலி நிகழ்வுகள்
ஆளும் கட்சியான Conservative, எதிர்க்கட்ச்சியான Labour, மற்றும் Liberal Democrats, Scottish National Party நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒன்று கூடி, போரின் போது சிறிலங்கா அரசின் கைகளில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிட்டதன் மூலம், குற்றவாளிகள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதிலும், மற்றும் நடந்த அட்டூழியங்களுக்கு நீதியை உறுதி செய்வதில் தங்கள் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினர்.
மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதற்கும், பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரந்த அரசியல் கருத்தொற்றுமை, கட்சி எல் லைகளுக்கு அப்பாற்பட்டிருப்பதை இந்த நிகழ்வு முக்கியமாக எடுத்துக்காட்டியது.
தமிழ்ச் சமூகம் அனுபவித்து வரும் வரலாற்று அநீதிகளுக்குத் தீர்வு காண்பதற்கான அவசரத் தன்மையையும், சூழ்நிலையின் தீ விரத்தன்மையையும் ஒட்டுமொத்தமாக பிரித்தானிய அரசியல் கட்சிகள் உணர்ந்துகொள்வதை இது பிரதிபலிக்கிறது.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG- T) நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றியது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ் சமூகத்துடன் சேர்ந்து பணியாற்ற ஊக்குவிப்பதும், அவர்களின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நீதிக்காக வாதிடுவதற்கும் ஒரு தளத்தை வழங்குவதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.
சக்திவாய்ந்த காணொளி
போரின் முடிவில் முள்வேலி வதை முகாம்களில் சிறிலங்காப் படைகளின் கைகளில் தமிழர்கள் எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதை எடுத்துக்காட்டும் சக்திவாய்ந்த காணொளியும் இந்நிகழவில் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், தமிழன அழிப்பு குறித்த பொதுமக்களின் புரிதலை அதிகரிக்கும் நோக்கில், இந்த நிகழ்வோடு கூடிய ஒரு கண்காட்சி ஒரு கல்விக் கருவியாகச் செயற்பட்டது. இதன் மூலம் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஈழத்தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அட்டூழியங்கள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் பற்றிய விரிவான கண்ணோட்டம் வழங்கப்பட்டது.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பானது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நினைவுப் புத்தகத்தில் கையொப்பமிடுதல் நிறைவடைந்த நிலையில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழத்தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு ஆதரவளிப்பதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
தமிழ் இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்களை மறக்க முடியாது, நீதி கிடைக்கும் வரை அவர்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.












