எங்கள் முடிசூடா மன்னவனின் இறுதி வேட்டுக்காக நம்பிக்கையோடு "முள்ளிவாய்க்கால் வரை" சென்றோம்.
மனித இனம் தன் வரலாற்று வழிநெடுகிலும் எண்ணற்ற இழப்புகளாலும் துயரத்தின் செய்திகளையும் நிறைத்திருக்கிறது, அந்த துயரத்தின் செய்திகள் இன்னுமொருமொரு தடவை மீட்டிப்பார்க்கும்போது எப்போதுமே ஏற்றுக்கொள்ளுக்கொள்ள முடியாத வலிகளின் நினைவுகளாகவே நீண்டு கிடக்கும் என்று சொல்லாம்.
பிறப்பொற்கும் எல்லா உயிர்க்கும் என வாழ்ந்த இனமொன்றின் குரல்வளை திருகி எறியப்பட்ட நாளாக பெரும் கனவுகளோடு தமக்காக தனித்தேசம், பண்பாடு என வானுயர வளர்ந்து நின்ற அத்தனையும் அடையாளம் அழிக்கப்பட்டு நந்திக்கடலோடு கலந்து போன கடைசி நாளென்ற கனதியும் கூடவே சேர்ந்துகொள்கிறது.
அப்படியாக காலத்தின் கணக்குகளில் விதியாடிய ஒரு சதி விளையாட்டாக ஈழத்தமிழர்களின் தலைவிதியும் காலாகாலத்திற்கும் இந்நூற்றாண்டின் மிகப்பெரும் மனிதப்பேரழிவை, அதன் மிகப்பெரும் வேதனைகளை நினைத்திருக்கவேண்டிய காலக்கட்டாயத்தை உண்டுபண்ணிவிட்டது என்றும் சொல்லிக்கொள்ளலாம்.
ஆம் அது ஒரு பேரவலம் , நினைக்கும்போதெல்லாம் நினைவிழந்து நிம்மதி மூச்சிரைக்கும் கொடூரமொன்றின் பிரசவிப்பானது.
ஆடலும் பாடலும் செழித்து ஆதி முதல் கலை வளர்ந்து சௌபாக்கியம் நிறைந்து புனிதமாக விளங்கிய பூமியில் பேய்கள் புகுந்தாற் போல அது அலங்கோலமாய் நிகழ்ந்து முடிந்தது.
காற்றின் வன்ம ஊளையில் மரணத்தில் ஓலங்கள் நிறைந்திருந்த நாளொன்றின் நினைவுகளை நம் மனத்திரைகளில் பிரவாகம் பெறச் செய்துவிடுகிறது.
மே 18 எனும் மறந்து கடந்து போகவே முடியாது என்று முழுவதையும் ஒருங்கு சேர ஈழத்தமிழர்களிடருந்து பறித்தெடுத்துவிட்ட அவலத்தின் அங்கமாய்ப்போன அந்நாள்.
இன்று அகன்று விரிந்த கடலை எல்லையெனக் கொண்டு உலகமெங்கிலும் பரந்து வாழும் ஒவ்வொரு ஈழத் தமிழனுக்குமான வலி மிகு நாளாக பிரளயம் ஒன்றின் சாட்சியாக அமைந்து விட்டது.
அன்று காலவெளிகளில் மறைந்துபோன அந்த நாள் ஆண்டுகள் தோறும் அதே கனதியோடு கடந்துபோகிறது, இன்று 14 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் என்றும் சொல்லாம்.
வழமை போலவே அன்றைய நாளும் எல்லா நாட்களைப்போலவும் கடந்து போயிருக்க வேண்டிய நாள் ஆனால் அன்று அது அவ்வாறு கடந்து போகப்பிராயத்தனப்படவில்லை போலும்.
பலரை வாழவைத்துக்கொண்டிருந்த நந்திக்கடல் அன்று வாழ்வழிந்துபோன பலரின் உயிரற்ற வெற்றுடல்களை போர்த்திக்கொண்டிருந்தது.
காற்று துயரத்தின் செய்தியை சொல்லவும் முடியாமல், மெல்லவும் வழியில்லாமல் பகீரதப்பிரயத்தனம் செய்துகொண்டிருந்தது.
கந்தகப்புகை கலந்துபோன மேகம் கை, கால் முளைத்தாற்போல அங்குமிங்குமாக ஓடிக்கொண்டேயிருந்தது, யாரிடம் சொல்லியழுவது என்று தெரியாமல்.
மாகதைகள் உலாவிய அந்த பெருநிலம் அன்று மௌன முத்துக்குளை சுமந்தபடி வாய்பேச மறுத்துக்கொண்டது.
சமரசம் செய்து வாழ்வதிலும் பார்க்க சமர் செய்து மாள்வது மானத்தின் பெரிது என ஈழத்தமிழினம் மண்டியிடாது சாய்ந்து போனது.
ஈழத்தமிழினம் உன்னதமான விடியலின் கனவை சுமந்து தனது கடைசி நம்பிக்கையோடு காத்திருந்தது கண்ணீரால் நிறைந்த கண்களோடு.
கொடும்பகையின் வக்கிரம் கூட்டாகச் சேர்ந்துகொள்ள சர்வதேச வல்லாதிக்கம் வல்லூறுகளாய் வந்து குவிந்திருந்தது வன்னிப் பெருலமெங்கிலும்.
கால காலத்திற்கும் யாராலும் நிராகரித்து விடமுடியாத வீரப்பிரதாபங்களோடு களம்கண்டு வீரப்போர் தொடுத்து விதையாகிப்போன அக்காவினதும், அண்ணாவினதும் தோழர்களின் உக்கிரம் குறைந்துகொண்டிருந்தது.
உயிர்கள் இழந்த வெற்றுடல்களில் கசியும் குருதியின் நிணத்தில் அதன் நெடி படர்ந்த துர்நாற்றம் வீசும் காற்றைக்கிழித்து காலப்பெருவெளிகளெங்கும் அந்தாகரம்.
கருமையின் நிறம் போர்த்திக்கொண்ட பொழுதுகளில் விளக்குகள் எரியாத நகரமொன்றிலிந்து விளக்குகள் அணைத்த வாகனங்கள் உருளத்தலைப்பட்டன.
சத்தியம் சிதைந்துபோயிருந்தது, அந்த சிதைவுகளில் அசாத்தியங்கள் நிகழ ஈனத்தின் குரல்கள் மங்கிப்போயிருந்தன, மந்திரக்கட்டுகளுள் சிக்கியதுபோல.
அன்று எங்களில் பலரின் விழுப்புண்களில் விறைத்துப்போயிருந்தது வீரமுலாவிய அந்தப்பெருநிலம், அங்கு வந்தவர் யாவரும் தமது பணிகள் முற்றுப்பெற்றுவிட்டதாக போய்க்கொண்டிருந்தனர்.
ஒரு சிலர் இன்னமும் வலுவிழந்து போய்விடாத நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தனர்.
முப்படை கண்ட "எங்கள் முடிசூடா மன்னவன்" தீர்க்கப்போகும் கடைசி வேட்டுக்காக காத்திருந்தோம், சிலவேளை எல்லாமும் மாறிப்போகலாம் எங்களுக்கான காலம் மீண்டும் மாறிப் பிறந்துவிடலாம், நாங்கள் வெல்லாம் இது அசாத்தியங்களை சாத்தியமாக்கிய அந்தப் பெருந்தலைமையால் முடியும்.
இப்படி உருவழிந்து போய்விடாத நம்பிக்கையின் நரம்புகளை இறுக்கமாக உருவி விட்டுக்கொண்டிருந்தார்கள், மறுபுறம் உலகம் முழுவதும் தமிழன் அதே நம்பிக்கைப்பிடிப்போடு காத்துக்கிடந்தான்.
நந்திக்கடலோர கரைகளின் வெண்மணல் திட்டுகளில் அந்த தமிழனின் போராயுதமும் காத்துதான் கிடந்தது இவர்களின் இந்த நம்பிக்கையைப்போல.
சபதங்களால் ஆன பீஸ்மரின் அம்புப்படுக்கையில் அதே சபதங்களால், பலரின் துரோகங்கள் நாறிய வாய்க்குள் சரிந்து கொண்டிருந்தது ஈழத்தமிழனின் அந்த சரித்திரம்.
விடிவுக்கான அறிகுறிகள் அற்றுப்போயிருந்தது அன்றைய நாள்.
அப்போது போராடிக்களைத்து சாவின் குறிகள் தரித்த முகங்கள் உலாவிக்கொண்டுதான் இருந்தன ஒருபக்கமாக, இன்னுமொரு பக்கம் வெண்பொசுபரசுக்குண்டுகள் வீழ்ந்து மண்கிழறி மனித மாமிசங்கள் தேடிக்கொண்டிருந்தன.
ஓயாமல் ஓடிக் கொண்டிருந்த அந்தக்கூட்டம் அன்று ஒரு ஓரமாய் ஒடுக்கப்பட்ட வரலாற்றில் எக்கிய வயிறும் ஏற்பட்ட பல்லுமாய் பதுங்குகுழிகள் தோறும் உறைந்து போயிருந்தது மனிதம்.
அன்றுவரை நிகழாததும் இனிமேல் நிகழப்போகாததுமான பெருவலியைச்சுமந்து உப்பிப்பெருத்து சீழ்வடியும் காயங்களில் புழுவாய் நெளிந்துகொண்டிருந்தது ஈழத்தமிழனின் இறுதி சுதந்திர நம்பிக்கை.
மௌனங்கள் போர்த்தி மயான அமைதிகொண்டிருந்த அந்த ஆலகாலம் உண்ட இரவு, இதுவரை நாளும் போற்றிப்புகழ்ந்து கொண்டாடிய வீரப்பிரதபங்கள் நிறைந்த பெருவரலாற்றை விழுங்கி ஏப்பம் விட்டபடி புதிய காலைப்பொழுதொன்றை பிரசவித்துக்கொண்டிருந்தது அன்றைய கொடுங்காலம்.
ஊமை போல விடிந்து கொண்டிருந்த அந்தக் காலைப்பொழுதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுகளுடன் அடங்கிப்போயிற்று அந்தப் பெருவரலாறும், அதன் மீதான இறுதி நம்பிக்கைகளும், ஈழத்தமிழனின் மண்டியிடாத மானமும் கூடவே.
அப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுகளில் ஏதோ ஒன்றுதான் தமிழன் ஒருவனின் கடைசி வேட்டொலியாகவும் வீரம் வீழ்ந்து போன தன் சமிக்கையாகவும் கூட இருந்திருக்கும்.
கந்தகப்புகை வாசம் அந்த வெளியெங்கிலும் பரவியிருக்க, பரிதவித்திருந்த குழந்தைகளையும், குண்டுமழை நடுவில் குருதியில் தோய்ந்து அகதிகளாக அடிபெயர்ந்த ஒவ்வொரு நினைவுகளையும் நினைவேந்தி துடித்தழ வேண்டிய கடப்பாடுடையவர்களாக நாம் நமது வரலாற்றை கடத்திக்கொண்டியிருப்பது ஒரு காலக்கட்டாயம் என்று சொல்லிக்கொள்வதுமே சலப்பொருந்தும்.
நாம் ஏலவே சொன்னது போலவே இந்த வரலாற்று வழிநெடுகிலும் துயரங்கள் தோய்ந்த இழப்புகளின் கதைகள் ஏராளம், அவற்றுள் ஈழத் தமிழர்களுக்கான பக்கங்கள் பதிந்து வைத்திருக்கும் ஒவ்வொரு கதைகளும் கண்களை பனிக்கச் செய்வது மட்டுமல்ல காலமுள்ளவரை யாராலும் மறந்து கடந்துவிட முடியாத பேரவலப்போரகும்.
இது இருபத்தி ஓராம் நூற்றாண்டின் போரின் பெயரிலான பேரவலம், என்றும் ஆறிடாத காயங்களின் காலச்சாட்சியம்.
மறந்து போகுமா மே 18, இறந்து போன உறவுகளையும் , இழந்து போன உரிமைகளையும் நினைவேந்தித் துடித்தழும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும்.
வலிகள் வார்த்தைகளால் வரித்துவிட முடியாதவை இந்த உலகில் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு இனத்துக்குமான வலிகளில் இழப்புகளின் கொடுமைகளோடு வாழும் ஈழத்தமிழனின் வலிகள் உயரியவையே.
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழனின் முதுகுக்கூனல் அல்ல, ஈழத்தமிழனின் முடிவில்லாத போராட்டத்தின் நீட்சி.