முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ஆம் ஆண்டு - பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!
முள்ளிவாய்கால் பேரவலத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர்நாடுகளில் நினைவு கூரப்படவுள்ள நிலையில், தற்போது புலம்பெயர் நாடுகளில் முக்கியமான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில், நேற்றைய தினம் இலங்கைத்தீவில் தமிழர்தேசத்தின் தொன்மையும் அரசியல் உரிமையும் என்ற கருப்பொருளில் ஒரு முக்கிய அமர்வு ஈழத்தமிழர் பேரவையால் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றது. இந்த அமர்வில் 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவிடம் கோரிக்கை
இதன் போது, ஈழத்தமிழர் தமது தன்னாட்சி உரிமையை பயன்படுத்தி தேசத்தை உடையவர்கள் என்பதனை அங்கீகரிக்குமாறு ஐ.நாவை வேண்டுவதுடன், இதனை வலியுறுத்துமாறு உலக நாடுகளிடம் குறிப்பாக பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்தது.
இலங்கைத் தீவில் நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழர் தேசத்திற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. 13ம் திருத்தச் சட்டமூலத்தினை அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அமர்வின் மாநாட்டின் முக்கிய அம்சமாக பிரித்தானிய ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னம் மற்றும் கருத்துரைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சுயாதீன விசாரணை
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் எலியட் கோல்போன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பரி கார்ட்னர் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான நிழல் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக் டொனாக் ஆகியோர் உரையாற்றிய போது இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறில்களுக்கு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு குற்றம் புரிந்தோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கியுள்ளனர்.