தமிழ் இனப்படுகொலை நினைவு ஊர்தி பவனி - யாழில் மக்கள் அஞ்சலி!
தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்தி பவனி ஐந்தாவது நாளாக இன்று யாழ்ப்பாணம் நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் பயணித்தது.
குறித்த ஊர்தி பவனி யாழ்ப்பாண நகரில் தரித்திருந்தபோது பொதுமக்கள் பலரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பயணங்கள்
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளம் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்தி பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.
குறித்த ஊர்தி வடக்கின் ஐந்து மாவட்டங்கள் ஊடாகவும் பயணித்து இறுதியில் முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.











