தமிழ் இனப்படுகொலை நினைவான ஊர்தி பவனி - ஆறாவது நாள் பயணம் வரணியில் ஆரம்பம்!
தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனியின் ஆறாவது நாள் பயணம் வரணியில் ஆரம்பமாகியுள்ளது.
தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும், இனப்படுகொலையை இளம்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.
பயணங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியில் இந்த ஊர்திப் பவனி தொடங்கியது.
பின்னர் வவுனியா சென்று, மன்னார் சென்று, அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம், கிளிநொச்சி, பூநகரி, சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்து அங்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று இன்று ஆறாவது நாள் பயணம் காலை வரணி மத்திய கல்லூரி முன்றலில் இருந்து ஆரம்பமானது.
இந்த ஊர்தி பவனியானது கொடிகாமம், பளை, பரந்தன், தர்மபுரம், விசுவமடு ஊடாக வள்ளிபுனம் பகுதியை சென்றடையும்.
மாபெரும் பவனி
இதனை தொடர்ந்து நாளை காலை வள்ளிபுனம் செஞ்சோலை வளாக சந்தியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு சந்தி சென்று காலை 8 மணிக்கு புதுக்குடியிருப்பு நகர் சென்றடையும்.
பின்னர், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து ஊர்தியுடன் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் அடங்கிய மாபெரும் ஊர்தி பவனியாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையும்.
ஆகவே அனைத்து உணர்வாளர்களும் இந்த ஊர்தி பவனியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
