சாதித்தது மும்பை இந்தியன்ஸ் -வெளியேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற பிளே ஒப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றியை பெற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 11 , இஷான் கிஷன் 15 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தனர்.
சரிவுக்குப் பின் அதிரடி
இந்த சரிவுக்குப் பின் கமரோன் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடி ஓட்டத்தை உயர்த்தியது. 11வது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 104 ஆக இருந்தபோது, சூர்யகுமார் யாதவ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில் கமரோன் கிரீன் ஆட்டமிழந்தார் அவர் 23 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 41 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் திலக் வர்மா 26 , டிம் டேவிட் 13 , கிறிஸ் ஜோர்டான் 4 , நேஹல் வதேரா 23 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
லக்னோ தரப்பில் நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். யஷ் தாகூர் 3 விக்கெட்டுகள், மோஷின் கான் ஒரு விக்கெட் எடுத்தனர்.
களமிறங்கிய லக்னோ
இதையடுத்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 40 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார். தொடர்ந்து, மயேர்ஸ் 18, குருணல் பாண்டியா 8 , பிரேராக் மாங்கட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 , கிருஷ்ணப்பா கவுதம் 2 , ஆயுஷ் பதோனி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிக்கோலஸ் பூரன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. தீபக் ஹூடாவும், கிருஷ்ணப்பா கவுதமும் சொர்ப்ப ஓட்டங்களில் ரன் அவுட் ஆகினர்.
அடுத்தடுத்து 3 ரன் அவுட் லக்னோவிற்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியது. நவீன் உல் அக் ஒரு ஓட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மோஹ்சின் ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
விக்கெட்டை அள்ளிய ஆகாஷ் மேத்வால்
இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 101ஓட்டங்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 , கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி -மும்பை அணி பலப்பரீட்சை
இதன்மூலம், மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. இதனால், லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறுகிறது. நேற்று பிளே ஒப் சுற்றில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் குவாலிபையர் 2-ல் மும்பை அணி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
