இராணுவ புரட்சியை அடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட ஆங் சான் சூகிக்கு மீண்டும் கடூழிய தண்டனை!
மியன்மாரின் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகி, தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு இராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இராணுவ புரட்சியையடுத்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி
அதனை தொடர்ந்து மியான்மரின் அதிபரான ஆங் சான் சூகியை இராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் தடுத்து வைத்துள்ளது.
இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கொரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல் மற்றும் ஊழல் என ஆங் சான் சூகி மீது 12 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், இவருக்கு ஏற்கனவே 17 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆங் சான் சூகி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
200 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிடும்
இதேவேளை விசாரணைகள் அரசியல் ரீதியாக உந்துதல் கொண்டவை என்று மனித உரிமைக் குழுக்களால் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டால், அவர் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
76 வயதான ஆங் சாங் சூகி, தலைநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

